உண்மையாகவே ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தமானதா?
CONTENTS
| ஒரு தவறான திருப்பம் |
| குறுகிய மனங்களும் பெரும்ப்பன்மையின் ஆட்சியையும் |
| ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுதல் |
| உண்மையான ஓய்வுநாளை கண்டறிதல் |
| யூதர்களுக்கு பயந்ததினால் |
| கொரிந்து பட்டணத்தில் ஞாயிறு ஆசரிப்பு இல்லை |
| பவுலின் நீண்ட பிரசங்கம் |
| ஐத்திகு ஏன் ஆலயத்தின் வெளியே விழுந்தான்? |
| அவர்கள் ஆசரித்த நாள் |

அத்தியாயம் 1: ஒரு தவறான திருப்பம்
தாவீதின் மிகவும் அழகான ஜெபங்களில் ஒன்று சங்கீதம் 43:3ல் பதிவு செய்யப்பட்டுள்ளது: “உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.” தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள சத்தியத்தைத் தேடும் ஒவ்வொரு நேர்மையுள்ள நபரின் இருதயத்திற்குள்ளும் இதே கருத்தான ஜெபம் காணப்படவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் போதிக்கப்பட எதிர்பார்ப்போரின் குணத்தை மனமுவந்து கற்றுக்கொள்ளுதலும் கீழ்ப்படிதலுமே வகைப்படுத்தவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு மலைப்பிரசங்கத்தில் பாகியவன்களைக் குறித்து கூறப்பட்ட அழகான வாக்குத்தத்தங்கள் நிறைவேறும். “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத். 5:6).
ஆனால் ஒரு சத்தியத்திற்காக ஜெபித்து, தேவன் நமது ஜெபத்திற்கு பதிலளிக்கும்போது, அந்த சத்தியத்திற்குக் கீழ்ப்படியக்கூடிய எண்ணம் நமக்கு இல்லையென்றால், அது ஒரு நன்மையும் செய்யாது. தேவன் நமகுக் கொடுக்கக்கூடிய உதவிகளில் மாபெரும் உதவி என்னவென்றால், அவருடைய வார்த்தையைக் குறித்த அறிவை நமக்குக் கொடுப்பதாகும். மேலும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதற்காக ஜெபித்து, அது எந்த ஒரு காரணமாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கான பதில் வரும்போது, அதற்குக் கீழ்ப்படியாமற் போவதுதான் ஒருவரும் செய்யக்கூடாத துணிகரமானச் செயலாகும்.
அநேகர் தங்களுடைய அனுபவத்தை வேத வசனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு உயர்த்தி நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, அவர்களுடைய அற்பமான, பெலவீனமான அனுபவத்திற்கு அதை ஒப்பிடுவதற்கு வேதத்தைக் கீழ்நோக்கி இழுக்கும் குற்றத்திற்கு உட்படுகிறார்கள். சத்தியத்தின் ஒரே ஒரு தீர்க்கமானப் பரிசோதனை மட்டுமே உண்டு, அது வேதாகமமாகும். ஒவ்வொரு ஆவிக்குரிய சிந்தனையும், நாம் படிக்கக்கூடிய ஒவ்வொரு புத்தகமும் மற்றும் நாம் கேட்கக்கூடிய ஒவ்வொரு பிரசங்கமும் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதவசனங்களின் பிழையேதுமற்ற சட்டத்தினால் அளிக்கப்படுகிறது. நாம் குழந்தைகளாயிருக்கும்போது, என்ன கற்பிக்கப்பட்டோம் என்பதோ, அல்லது பெரும்பான்மையின் கூட்டம் எதைப் பின்பற்றுகிறது என்பதோ அல்லது நமது உணர்வுகள் எதை யோசிக்கவும், நம்பவும் நம்மை வழிநடத்துகிறது என்பதோ பிரச்சனையில்லை. அந்தக் காரணிகள் அனைத்தும் ஒப்பிடப்படமுடியாத முழுமையான சத்தியப் பரிசோதனைக்கு மதிப்பற்றவையாகும். ஆனால் மிக முக்கியமான கேள்வி ஒன்று பதிலளிக்கப்படவேண்டும். இந்தக் கருத்தைக் குறித்து தேவனுடைய வார்த்தைக் கூறுவது என்ன என்பதே அக்கேள்வி.
தாங்கள் எதை நம்புகிறோமோ, அதற்கு உண்மையாக இருந்தால், தேவன் அவர்களை ஏற்றுக்கொள்வார், ரட்சிப்பார் என சிலர் எண்ணுகிறார்கள். எனினும், உண்மைத்துவம் மட்டும் போதாது. ஒருவர் உண்மையாக இருக்கலாம், ஆனால் அந்தக் காரியம் தவறாக இருக்கலாம். பல வருடங்களுக்குமுன், ப்ளோரிடாவிலுள்ள வெஸ்ட் பாம் கடற்கரையை நோக்கி காரில் பயணம் செய்ததை நினைவுகூறுகிறேன். அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறேன் என்று நான் நினைத்தேன். அது இரவு நேரமாக இருந்தது, மேலும் நான் சாலையில் சிறிது நேரத்திற்கு எந்த ஒரு வழிகாட்டும் குறிப்புப் பலகைகளையும் பார்க்கமுடியவில்லை. திடீரென, என் காரின் வெளிச்சத்தில் ஒரு குரிப்புப்பலகையை பார்த்தேன், அதில் “பெல்லி கிளேட் (Belle Glade) 14 மைல்” என்று எழுதியிருந்தது. சோர்ந்துபோன இருதயத்துடன், வெஸ்ட் பாம் கடற்கரைக்கு எதிர் திசையில் பயனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் தவறானப் பாதையில் சென்றுகொண்டிருந்தேன். அந்த இரவில், என்னைக் காட்டிலும் அவ்வளவு நிச்சயத்துடன் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் உண்மையில் நான் தவறாக இருந்தேன். இப்போழுதும் நான் எப்படியோ ஏதோ ஒரு இடத்தில் வெஸ்ட் பாம் கடற்கரையைக் கண்டுபிடித்துவிடுவேன் என்று என்னால் தொடர்ந்து பயணம் செய்திருக்கமுடியும். மாறாக, என் காரைத் திருப்பி, நான் தவறாக எடுத்த அதே வளைவிற்குச் சென்று, வெஸ்ட் பாம் கடற்கரைக்குச் செல்லக்கூடிய சரியான வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அதுவே செய்வதற்கான சரியான காரியமாக இருந்தது.
அத்தியாயம் 2: குறுகிய மனங்களும் பெரும்ப்பன்மையின் ஆட்சியையும்
சரிசெய்யப்பட விரும்புகிறவர்களிடம் தேவனுடைய வார்த்தையிலிருந்து அநேகங் காரியங்கள் உண்டு. குறிகிய மனங்களையுடைய மக்களே மிகவும் அதிகமாகப் பரிதாபப்படவேண்டியவர்கள். தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கு மாறுபடுகிற எந்தத் தகவலையும் அவர்கள் எதிர்ப்பார்கள். அவர்களுடைய மனங்கள் ஏற்கனவே தீர்மானத்துடன் இருப்பதால், தாங்கள் தகவல்களினால் தொல்லையைப் பெற விரும்பமாட்டார்கள். குறிப்பாக, ஓய்வுநாளைக் குறித்து பேசும்போது இது உண்மையாகிறது.
பெருந்திரளான மக்கள் வாரத்தில் அவர்கள் ஆசாரிக்கவேண்டிய நாளைக் குறித்த கருத்தை வழி வழியாகப் பெற்றிருக்கிறார்கள். வேறெந்த கோணத்திலும், ஒரு நோக்கத்துடன் அதைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக எண்ணுகிறார்கள். பத்து பிரமாணங்களில் ஒரு பிரமாணம் ஓய்வுநாள் ஆசரிப்பை வலியுறுத்துகிறது என்பதை அநேகர் அறிவார்கள். ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனினும் அவர்கள் தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து வேறொரு நாளை மிக உறுதியாகப் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வாரத்தின் முதலாம் நாளை, அதாவது வேதாகமக் கட்டளை ஏதுமில்லாத ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்கிறார்கள்.
இந்தக் கோட்பாடுகளுக்கு எதிர்மறையாக வேதம் பதிலளிக்கிறது. ஆவிக்குரிய காரியங்களில் நம்மிடமுள்ள ஆதாரத்திலுள்ள தகவல்களில் பெரும்பாலானவை இவர்களுடைய கோட்பாடுகளுக்கு எப்பொழுதும் எதிர்மறையாகவே இருக்கின்றன. “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்” (லூக்கா 17:26) என்று இயேசுதாமே கூறினார். பெருவெள்ளத்திலிருந்து காகாப்பட்ட எட்டுபேர் மாத்திரமே பேழைக்குள் சென்றனர். உலகத்தின் முடிவில், குறிப்பிடத்தக்க விதத்தில், ஒரு சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என கிறிஸ்துவானவர் போதித்தார். அவர் கூறியதாவது: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியைப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13, 14).
இன்று, மிகப் பெரும்பாலான கிறிஸ்தவர்களும், பிரபலமான ஊழியக்காரர்களும், இறையியலாளர்களும் ஏழாம் நாள் ஓய்வுநாளுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையை ஆசாரிக்கிறார்கள் என்பது மிகவும் உண்மையாகும். இந்தக் கருத்து மட்டுமே ஒருவரை அதிகமாக ஈர்க்கக்கூடாது.
கிறிஸ்துவின் வார்த்தைகள் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டதென்றல், அது எச்சரிப்பின் கொடியை உயர்த்தவேண்டும். பெரும்பாலான மக்கள் கூட்டத்தினரிடம் உண்மை எப்பொழுதும் பிரபலமாக இருந்ததில்லை. மேலும், இன்று பெரும்பான்மையில் உள்ளவர்கள், யுகங்கள் நெடுகிலும் தாங்கள் விரும்புகிறபடி தங்களை வாழ அனுமதிக்கும் சுமூகமான, சுலபமான, வசதியான மார்க்கத்தை அதிகம் தேடுவதைப்போல அவர்கள் உண்மையில் சத்தியத்தைத் தேடுவதில்லை.
பின், ஓய்வுநாள் சத்தியத்திற்கானப் பரிசோதனையாக எது இருக்கவேண்டும்? ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு காரியம் மட்டுமே – தேவனுடைய வார்த்தை. துரதிஷ்டவசமாக, இந்தத் தலைப்பைக் குறித்து கோடிக்கணக்கான மக்கள் வேதத்தைத் தாங்களாகவே ஒருபோதும் படித்ததில்லை. இந்தப் பெரும்பான்மைக் கூட்டத்தின் ஞாயிறு ஆசரிப்புப் பழக்கத்தை சரியானதா என்று சோதிக்கும்படி நான் விரும்புகிறேன். அது வேதாகம சத்தியமென்றால், பின் நாமனைவரும் அதை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் உண்மையாக ஆசரிக்கவேண்டும். வேத வாக்கியங்கள் அதை ஆதரிக்கவில்லையென்றால், பின்னர் நாம் ஆசாரிக்கவேண்டுமென்று தேவன் வலியுறுத்திய நாளைக் கண்டுபிடிக்கும்வரை, வேதத்தை விடாமுயற்ச்சியுடன் தேடவேண்டும்.
இந்தத் தலைப்பை அணுகுவதற்கான வழி என்னவென்பதை நான் அறிவேன், அதாவது வாரத்தின் முதலாம் நாளைக் குறித்து வேதம் கூறுகிற ஒவ்வொரு கருத்தையும் நாம் கண்ணோக்கவேண்டும். புதிய ஏற்பாட்டில், வெறும் எட்டு வசனங்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமையைக் குறித்து குறிப்பிடுகிறது; இந்த வசனங்களை கவனமாகப் படிப்பதன்மூலம், நாம் கருத்தில்கொள்ளவேண்டிய எல்லா ஆதாரங்களும் நமக்கு முன் இருக்கிறதென்பதைக் குறித்து நாம் நிச்சயத்துடன் இருக்கலாம். வாரத்தின் முதலாம் நாளை ஆசாரிப்பதற்கான எந்த ஒரு வேதாகம அதிகாரம் இருந்தால், அது இந்த வசனங்களில் ஒன்றில் கண்டுபிடிக்கப்படவேண்டும்.
இந்த வகையான, முழுமையான ஆய்வின் விளைவுகளை சந்திக்க நாம் விருப்பத்தோடிருக்கிறோமா? இங்கேதான் நமது தவறான அபிப்ராயமானது பரிசசோதிக்கப்படபபோகிறது! ஒரு நோக்கத்தோடு தேடும் இந்தத் தேடுதல் வெளிப்படுத்தும் எதற்கும் நமது மனங்களை முழுவதுமாகத் திறந்துவைக்க முடியுமா? இவை தந்திரமானக் கேள்விகள் அல்ல, தனிப்பட்ட விதத்தில், எந்த நாளை ஓய்வுநாள் என்று கண்டறியப்படப்போகிறது என்பதைக் குறித்து எனக்கு எந்தவிதமானப் பிரச்சனையும் இல்லை. வேதம் அதைப் போதிக்குமானால், நான் திங்கள், வியாழன், வெள்ளி, அல்லது ஞாயிறையும் மகிழ்ச்சியுடன் ஆசரிப்பேன். பல வருடங்களுக்கு முன், நான் ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்றும், என்னுடைய உணர்வுகள் எதுவாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தை எங்கே வழிநடத்தினாலும் அதைப் பின்பற்றவேண்டுமென்றும் தீர்மானித்தேன்.
ஒரே வேதாகமக் கட்டளையாக இருக்கும் பட்சத்தில், நான் எந்த நாளைப் பரிசுத்தமாக ஆசாரிக்கிறேன் என்பது எவ்விதத்திலும் எனக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை. வாரத்தின் முதலாம் நாளைக் குறிப்பிடுகின்ற புதிய ஏற்பாட்டின் ஆய்வு துவங்கும்போது, ஒவ்வொரு குறிப்பையும் பார்க்கும்போது, நீங்களும் அதே வண்ணம் உணருவீர்கள் என்று நம்புகிறேன்.
அத்தியாயம் 3: ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுதல்
முதல் சுவிசேஷ புத்தகத்தில் துவங்குவோம். மத்தேயு இவ்வாறு எழுதுகிறார், “ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்” (மத்தேயு 28:1). ஓய்வுநாள் வாரத்தின் முதலாம் நாளாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்பதற்கான சில ஆர்வமூட்டும் ஆதாரங்கள் இங்கே நமக்கு உண்டு. இந்தப் பதிவின் பிரகாரம், முதலாம் நாள் துவங்குகையில் ஓய்வுநாள் முடிவுபெற்றது. அவை அடுத்தடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களாகும். வேதவசனத்தின்படி, ஒருவரும் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாள் என்று உண்மையாகவே அழைக்கமுடியாது. அது வேதத்தின் பிரகாரம் இல்லாமலும் குழப்பமானதாகவும் இருக்கும். ஓய்வுநாளுக்கு மறுநாள் பொழுதுவிடிந்து வாரத்தின் முதலாம் நாளிலே ஸ்திரிகள் வந்து இயேசு ஏற்கனவே உயிர்த்தெழுந்துவிட்டார் எனக் கண்டறிந்ததே மத்தேயுவினுடைய சாட்சியின் கருத்தாகும். இந்தக் கருத்து அடுத்து சுவிசேஷப் புத்தகத்துடன் மிகச் சரியாக ஒன்றுபட்டு, இன்னும் ஒரு சில தகவல்களையும் சேர்க்கிறது. காலைநேரத்தை மாற்கு “சூரியன் உதயமாவதற்கு” இணையாகக் கூறுவதை கவனிக்கவும். “ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்” (மாற்கு 16:1-3).
இணையான இவ்விரண்டு சுவிசேஷப் பதிவுகளுமே மத்தேயுவின் வார்த்தைகளில் “வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில்” என்ற வார்த்தைகளில் பொதுவாகத் தோன்றக்கூடிய தவறானப் புரிதலை தெளிவாகுகிறது. சிலர் இதை சனிக்கிழமை சாயங்காலம் சூரிய அஸ்தமனத்திற்கு சற்றுமுன் உள்ள நேரம் என விளக்குகின்றனர். யூத வழக்கத்தின்படி, சூரிய அஸ்தமனத்தை தான் ஓய்வுநாளின் முடிவாகக் கணக்கிடுவார்கள் என்பதால், வாரத்தின் முதலாம் நாளுக்கு சற்றுமுன் தான், சூரிய அஸ்தமனத்தின்போதுதான், ஸ்திரிகள் வந்தார்கள் எனக் கருதுகிறார்கள்.
இங்குதான் நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்துடன் ஒப்பிடுவதன் மதிப்பைப் பார்க்கப்போகிறோம். ஸ்திரிகள் சனிக்கிழமை இரவு வந்து கல்லறையில் யாருமில்லாததைக் கண்டறிந்த கருத்து மாற்கு புத்தகத்தின் வார்த்தைகள் சாத்தியமற்றதாக்கி விடுகிறது. ஏனெனில் அவர் அதே ஸ்திரிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் வருவதாகவும் கூறுகிறார், ஆனால் அவர்கள் “கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்” என்ற கேள்வியையும் கேட்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அன்று அந்த இராத்திரியில் இருந்து, ஒருவருமில்லாத கல்லறையைக் கண்டறிந்தால், உண்மையாகவே அது ஏற்கனவே புரட்டிப்போடப்பட்டிருந்தது என்பதை அறிந்திருப்பார்கள். எனவே, மத்தேயுவின் “பொழுதுவிடிந்து” என்னும் வார்த்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்தின்போது நடந்ததைக் குறிபிடுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம்.
முதலாம் நாளுக்கான மூன்றாவது வேதக் குறிப்பு மாற்கு 16:9ல் உள்ள எளிமையான வாக்கியமாகும், “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.” இங்கே ஒரு சிறிய கருத்துரை தேவைப்படுகிறது, ஏனெனில் அது உயிர்த்தெழுதலின் ஞாயிறு அதிகாலை நடந்த அதே நிகழ்வைதான் மீண்டும் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட எந்த வசனங்களிலும் வாரத்தின் முதலாம் நாள் பரிசுத்தமானது என்று குறிப்பிடப்படவில்லை என்பது நாம் கவனிக்கவேண்டிய முக்கியக் கருத்தாகும். மேலும் அந்த நாள் உயிர்த்தெழுதலைக் கனம்பண்ணுவதாக எந்தக் குறிப்பும் இல்லை.
அத்தியாயம் 4: உண்மையான ஓய்வுநாளை கண்டறிதல்
உயிர்த்தெழுதலைக் குறித்த முழுமையான காட்சிகள் லூக்காவின் சுவிசேஷ வசனங்களில் உள்ளன. இப்பொழுதும் நாம் வாரத்தின் முதலாம் நாளுக்கான நான்காம் குறிப்பைப் படிக்கப்போகிறோம், “அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று” (லூக்கா 23:52–54).
மேற்கொண்டு படிப்பதற்கு முன், சிலுவையிலறையப்பட்ட இந்த நாளைக் குறித்து கவனமாக நாம் ஆராய்வோம். பெரும்பான்மை கிறிஸ்தவ சமுதாயம் இன்று நாம் புனித வெள்ளி என்றழைக்கும் நாளில்தான் இந்த நிகழ்வுகளெல்லாம் தோன்றின என்பதை ஒப்புக்கொள்கிறது. இங்கே அந்நாளை “ஆயத்தநாள்” என்றழைக்கப்படுகிறது, ஏனெனில் வரவிருக்கும் ஓய்வுநாளுக்கான விசேஷித்த ஆயத்தங்களை செய்யவேண்டிய நேரமாக அது இருந்தது. இன்னும் சொல்லப்போனால், “ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று” என்ற இந்த வசனம் மிகவும் எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் அடுத்து வருவது ஓய்வுநாள் என்பதைக் குறிக்கிறது.
இயேசு மரித்த அன்றைய தினத்தில் வேறு என்னவெல்லாம் நடந்தன? “கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமலத்தைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வசனங்கள் 55, 56). அந்த வெள்ளிக்கிழமையின் மீதமான நேரத்தில், யேசுவுடன் இருந்த ஸ்திரிகளில் சிலர் கந்தவர்க்கங்களை எடுத்துக்கொண்டு மறுநாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் கல்லறைக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்தனர். பின்னர், சூரியன் அஸ்தமனமானபோது, அவர்கள் “கற்பனையின்படியே ஓய்வுநாளை ஆசரித்தார்கள்.” குறிப்பிட்ட இந்த நிகழ்வானது புனித நாளான வாராந்திர ஓய்வுநாள் பத்து பிரமாணங்களில் ஒன்று என்பதை அடையாளப்படுத்துகிறது, மேலும் பஸ்காவோ அல்லது மற்ற எந்தப் பண்டிகை ஓய்வுநாளோ அந்த வாரத்தின் எந்த நாளிலும் வருவதற்கு வாய்ப்பில்லை.
அடுத்த வசனமானது மறுநாளில், ஞாயிற்றுக்கிழமையில் அந்த ஸ்திரிகள் என்ன செய்தார்கள் என்பதைக் கூறுகிறது. “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு...” (லூக்கா 24:1, 2).
முதலில் இயேசு உயிர்த்தெழுந்த நாளில் அந்த ஸ்திரிகள் தங்களுடைய வழக்கமான வேலையைச் செய்யும்படி வந்தார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. நவீன கால சபைகள் எல்லாமே வாரத்தின் முதலாம் நாளை அந்தக் குறிப்பிட்ட நாளை ஈஸ்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றன. இயேசு அந்நாளின் இருண்ட நேரத்தில்தான் உயிர்த்தெழுந்திருக்கவேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு சுவிசேஷப் புத்தகத்திலும் அதின் வசனங்களிலும், உயிர்த்தெழுதல் நடந்த அந்த நாளில், ஸ்திரிகளோ அல்லது வேறொருவரோ அந்த நாளுக்கென ஒரு புனிதத்தை சேர்த்ததாக எந்த ஒரு ஆதாரமும் நமக்கு இல்லை.
வாரத்தின் இறுதியில் பல்வேறு நிகழ்வுகளுடன் முடிந்த லூக்காவின் பதிவானது, உண்மையான ஏழாம் நாளாகிய ஓய்வுநாளை இன்னும் நம்மால் துல்லியமாகக் கண்டறியமுடியும் என்பதை எந்த ஒரு சந்தேகத்திற்கும் எதிராக நிரூபிக்கிறது. வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு என்ற அடுத்தடுத்து வரும் மூன்று நாட்களின் நிகழ்வுகளை அவர் விவரிக்கிறார். இயேசு ஆயத்தநாளில் மரித்தார், ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. கிறிஸ்தவர்கள் இந்நாளை புனித வெள்ளி என்றழைக்கிறார்கள். அடுத்த நாள், “கற்பனையின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” என்பது ஓய்வுநாளைக் குறிக்கிறது. “ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்” என்பதைப் பிரமாணம் வெளிப்படையாகக் கூறுவதால், ஓய்வுநாள் ஏழாம் நாளாகிய சனிக்கிழமையாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
இயேசு தம்முடைய சிருஷ்டிப்பின் வேலையிலிருந்து ஓய்வுநாளில் ஓய்ந்திருந்ததைப் போலவே, தம்முடைய மீட்பின் பணியிலிருந்து, ஓய்வுநாளில் கல்லறையில் ஓய்ந்திருந்தார் என்பதை அறிவதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
ஓய்வுநாளுக்கு மனுநாளில், இயேசு உயிர்த்தெழுந்தார். இன்று அது ஈஸ்டர் ஞாயிறாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் வேதமோ அதை “வாரத்தின் முதலாம் நாள்” என்றே அழைக்கிறது. வாக்குவாதத்திற்கு இடமின்றி, அனைத்து கிறிஸ்தவ சபைகளும் பதிவுசெய்யும் இந்த சரித்திர உண்மைகளின் வெளிச்சத்தில் பார்த்தால், உண்மையான ஓய்வுநாளைக் குறித்து தாங்கள் அறியாமையில் இருப்பதாக ஒருவரும் கூறமுடியாது. அந்த நாள் புனித வெள்ளிக்கும் ஈஸ்டர் ஞாயிறுக்கும் இடையே உள்ள நாள். அந்த மூன்று நாளும், லூக்காவின் காலவரிசை பதிவின்படி ஒரு பரிபூரனமானப் பதிவாகும். மிகவும் எளிமையான, படிப்பறிவில்லாத நபரும்கூட எழாம்நாளை வேதாகம ஓய்வுநாளை நமது நவீன நாட்காட்டியில் கண்டறியமுடியும்.
இப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமையைக் குறித்த ஐந்தாவது குறிப்பை புதிய ஏற்பாட்டு வசனத்திலிருந்து பரிசோதிக்க ஆயத்தமாக உள்ளோம். “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்” (யோவான் 20:1). உயிர்த்தெழுதலைக் குறித்த யோவானின் விளக்கத்தில் மிகச்சிறிய தகவலே உள்ளது. மற்ற எழுத்தாளர்களைப் போலவே வாரத்தின் முதலாம் நாளை எவரும் பரிசுத்தமாக ஆசாரித்ததற்கான எந்த ஒரு குறிப்பையும் கொடுக்கவில்லை. இதுவரையில் எல்லா சுவிசேஷப் புத்தகங்களிலுள்ள குறிப்பிடத்தக்கப் பொதுவான ஒரு காரியம் என்னவெனில் இப்படியொரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பதைத் தெரிவிக்கிறது.
அத்தியாயம் 5: யூதர்களுக்கு பயந்ததினால்
அதே அதிகாரத்தில் மீண்டும் யோவான் “முதலாம் நாளைக்” குறிப்பிடுகிறார், மேலும் இந்த வசனம் ஞாயிறு ஆசாரிப்பிற்கு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. “வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார்” (லூக்கா 20:19). என்னதான் இயேசு உயிர்த்தெழுந்த அந்த நாளில், மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இந்தக் கூடுகை நடந்திருந்தாலும், அது விசேஷித்த துவக்கத்திற்கான ஓர் நிகழ்வாக இருந்ததா என்ன?
ஏனெனில் இப்படிப்பட்ட நிகழ்விற்கு அந்த சூழ்நிலை சாதகமற்றதாக இருந்தது. அவர்கள் “யூதர்களுக்கு பயந்ததினால்” அங்கே கூடியிருந்தார்கள் என வசனம் தெளிவாகக் கூறுகிறது. பயத்தில் இருந்த சீஷர்கள் கல்லறை வெற்றிடமாக இருந்தது என்பதைக் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தனர், இன்னும் கொஞ்ச நேரத்தில் இயேசுவின் உடலைக் களவாய்க் கொண்டுபோனதர்காகக் குற்றஞ்சாட்டப்படப்போகிறார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். பாதுகாப்பிற்காகவும் மீண்டும் நிச்சயத்தைப் பெறவும் குழப்பத்திலிருந்த சீஷர்கள் ஒன்றாகக் குழுமியிருந்தனர்.
உண்மை என்னவென்றால், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்கள் நம்பவில்லை. உயிர்த்தெழுந்த கர்த்தரைப் பார்த்த மரியாள் மற்றும் மற்ற சீஷர்களுடைய சாட்சியை அவர்கள் முற்றிலும் நிராகரித்தனர் என்று மாற்கு சுவிசேஷம் பதிவிடுகிறது. “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்” (மாற்கு 16:9-14).
இந்த வார்த்தைகளின் அடிப்படையில், நம்மை சங்கடத்திற்குள்ளாக்கும், மூடிய அறையில் நடந்த, அந்த ஞாயிறு மதியக் கூட்டத்தைக் குறித்து நாம் அமைதியாகக் கடந்துவருவதே சிறந்ததாகும். உயிர்த்தேழுதலைக் குறித்து சிலர் சித்தரித்தப் பிரகாரம் அது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி நிரம்பிய ஒரு நிகழ்வு அல்ல. உண்மையில், ஓர் அற்புதம் நடந்திருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறிகூட சீஷர்களிடம் இல்லை. அவர்கள் பயந்திருந்தனர், மனச்சோர்வுற்றிருந்தனர் மற்றும் அவிசுவாசத்திலிருந்தனர். இயேசு அவர்களுக்கு முன் தோன்றியபோது, அவர்கள் தங்கள் சொந்த நண்பர்களுடைய சாட்சியை நிராகரித்தாலும், அவர்களுடைய அவிசுவாசத்தினாலும் அவர் ஒரு உறுதியான கடிந்துரையை முன்வைக்கிறார். இந்த நிகழ்வை உயிர்த்தெழுதலைக் கனம்பண்ணக்கூடிய ஆராதனையாக ஆக்குவது எத்தனை தவறான ஓர் வழிநடத்துதலாக உள்ளது!
இதுவரை நாம் ஏட்டில் ஆறு குறிப்புகளைக் கவனமாகப் படித்துள்ளோம். ஆனால் இவைகளில் ஒரு குறிப்பும் ஞாயிறு ஆசரிப்பைக் குறித்து எந்த ஒரு மேற்கோளையும் கொடுக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், ஒவ்வொரு சம்பவமும் வாரத்தின் முதலாம் நாளை ஆராதனைக்காகவோ, ஜெபத்திற்காகவோ ஓய்வுக்காகவோ அல்லது உயிர்த்தெழுதலைக் கனம்பண்ணுவதற்காகவோ மாற்றப்பட்டதென்பதைக் குறித்து முற்றிலும் அறியாமையில் உள்ளது. உறுதியான இந்தச் சம்பவங்கள் நடந்து பல வருடங்கள் கழித்து தான் சுவிசேஷப் புத்தகங்கள் எழுதப்பட்டன, ஆவியானவர் அந்நிகழ்வைக்குறித்த முழுவிபரங்களையும் அவர்களுக்கு உணர்த்தியருளப் போதுமான நேரம் இருந்தது. “சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவதே” பரிசுத்த ஆவியானவருடைய வேலை என இயேசு தம் சீஷர்களிடம் கூறினார். முதலாம் நாள் ஆசரிப்பு சத்தியத்தின் ஒரு பகுதி என்றால், பின்னர் பரிசுத்த ஆவியானவர் அதை மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவானுக்கு தெய்வீக வழிநடத்துதலின்கீழ் அவைகளை வெளிப்படுத்தியிருப்பார். அவ்வாரே நமது கர்த்தரும் கூறியுள்ளார்.
இப்பொழுதும் நாம் மீதமுள்ள இரண்டு குறிப்புகளுக்குத் திரும்புவோம். இந்த வசனங்களிலும் நாம் எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டறியமுடியவில்லை என்றால், நாம் நமது ஆராய்ச்சியை ஒதுக்கித்தள்ளுவோம். ஏனெனில் தேடுவதற்கு வேறு எந்த ஆதாரமும் நமக்கு இல்லை. வாரத்தின் முதலாம் நாளைக் குறித்துப் பேசும் பவுலும் லூக்காவுமே நமது இறுதி சாட்சிகள் ஆவர். இவர்கள் இருவர் கூறியவைகள் முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 6: கொரிந்து பட்டணத்தில் ஞாயிறு ஆசரிப்பு இல்லை
1 கொரிந்தியர் 16:1, 2ல் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “பரிசுத்தவங்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.”
அப்போஸ்தலன் என்ன சொன்னார் என்பதைக் கருத்துடன் கவனிக்கவும். ஒரு ஆவிக்குரிய கூட்டம் நடத்தப்பட்டு காணிக்கை சேகரிக்கப்பட்டது என அநேகர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆசியாவிலுள்ள சபைகளுக்கு பவுல் விசேஷித்த முறையீடுகளை எழுதிக்கொண்டிருந்தார், ஏனெனில் எருசலேமிலுள்ள அநேகமான கிறிஸ்தவர்கள் உணவிற்காகவும் அன்றாட தேவைகளுக்காகவும் பெருமளவில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். கொரிந்துவிலுள்ள சபையிடம் பவுல் உணவு, உடைகள், மற்றும் பிற பொருட்களை சேகரிக்குமாறு கேட்டு, அதை எருசலேமுக்கு எடுத்துக்கொண்டுபோக அவர் ஆட்களை அனுப்புமட்டும் அவர்கள் அவைகளை தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டார். “சேர்த்துவைக்கக்கடவன்” என்ற வார்த்தையானது கிரேக்க மொழியில் வீட்டில் சேர்த்துவைத்தல் என்று அர்த்தம் கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமையை ஆசாரிப்பவர்களும்கூட இதை ஒப்புக்கொள்கின்றனர்.
வாரத்தின் முதலாம் நாளில் எந்த ஒரு ஆராதனையும் நடத்தப்படவில்லை. சேர்த்துவைத்தலும் சேமித்துவைத்தலுமே அந்நாட்களில் நடந்தன. இந்த வேலையானது ஞாயிற்றுக்கிழமையில் நடக்கவேண்டுமென்று பவுல் ஏன் அறிவுறுத்தினார், அதைச் செய்து முடிப்பதில் எது சம்பந்தப்பட்டிருந்தது?
முதலில், இதைக்குறித்த கடிதமானது எங்கே ஓய்வுநாள் ஆசாரிப்பிற்காக எல்லோரும் ‘ஒன்றாகக்’ கூடினார்களோ, அதாவது சபையிடம் அது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த வேலையை செய்வதற்கான முதல் வாய்ப்பானது அடுத்த நாளில், அதாவது வாரத்தின் முதலாம் நாளில் தான் உள்ளது. எருசலேமில் வெளிப்படையான ஓர் உணவுப்பற்றாக்குறையும், மேலும் அதின் பிரதானத் தேவை பணமில்லை என்பதையும் நினைவில்வைத்துக்கொள்ளவும். இப்படிப்பட்டப் பஞ்சங்களும் பற்றாக்குறைகளும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் புதிது அல்ல என்பதை அப்போஸ்தலர் 11:28-30ல் லூக்காவும் நினைவுபடுத்துகிறார்.
ரோமாபுரியிலுள்ள சபையானது துன்புற்றிருந்த கிறிஸ்தவர்களின் விசேஷித்த தேவைகளைக் குறித்து ஒரு குறிப்பைக் கொடுக்கிறது. “இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிளுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்” (ரோமர் 15:25, 28).
இங்கே அப்போஸ்தலன் தன்னுடைய நன்மையான விண்ணப்பத்தில் உள்ள முக்கியமான பகுதியை சுட்டிக்காட்டுகிறார். ரோமக் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறதற்காகப் போதகர்களை அனுப்பியதற்காக எருசலேமிலுள்ள தாய் சபைக்கு அதிகமாக நன்றிக்கடன்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து பெற்ற ஆவிக்குரிய சத்தியத்திற்குப் பதிலாக, அதைப் பாராட்டும்படியாக, இவ்வுலப் பொருட்கள், பரிசுகளை அவர்களுக்குத் திருப்பி அளிக்குமாறு பவுல் வலியுறுத்துகிறார். எப்படிப்பட்ட பரிசுகள் பவுலின் மனதில் இருந்தன?
அது அவர்களிடம் “இந்தப் பலனை ஒப்புவித்தபின்பு” என பவுல் விளக்குவது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. இதற்கான கிரேக்கப் பதம் “கார்ப்பஸ் (Karpos)” ஆகும். அது உண்மையான கனியைக் குறிப்பிடுகிறது. ஒருவேளை அது “கிரியைகளின் பலன்” என்ற அர்த்தத்தை உடையாதகவும் இருக்கலாம். இது “நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு” பவுல் கொரிந்து சபை கிறிஸ்தவர்கள் தங்கள் கிரியைகளை வாரத்தின் முதலாம் நாளில் செய்வதற்கு ஆலோசனை கூறியதற்கு இன்னும் கூடுதல் வெளிச்சத்தை அளிக்கிறது.
நிலத்திலிருந்து பொருட்களை சேர்ப்பதும் செமித்துவைப்பதும் ஓய்வுநாளில் செய்வது எற்புடையதாயிருக்காது. இந்த வசனங்களில், மீண்டும் ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமை உலக வேலைகளை செய்வதற்கான நாளாக அடையாளம் காணப்படுகிறது. மேலும் அந்நாளில் ஆராதனையோ ஆசாரிப்போ நடந்ததாக எந்த ஒரு குறிப்பும் கொடுக்கப்படவில்லை.
அத்தியாயம் 7: பவுலின் நீண்ட பிரசங்கம்
இது நமக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தத்திற்கான ஆதரவை ஏதேனும் ஒரு வழயில் கொடுக்கக்கூடிய கடைசி குறிப்பாக உள்ளது. ஆரம்பகால கிறிஸ்தவ சபையைக் குறித்த லூக்காவின் வரலாற்றில் பவுல் துரோவாவில் விசுவாசிகளிடமிருந்து வழியனுப்பு கூட்டத்தைக் குறித்து விவரிக்கிறார். தேவனுடைய கற்பனைகளுக்குத் தாங்கள் கீழ்ப்படியாததைக் குறித்து நியாயப்படுத்த எந்த ஒரு சிறிய சாக்கும் சொல்வதற்கு முயலுபவர்கள் அப்போஸ்த்தலர் புஸ்தகத்திலுள்ள பதிவை மிகவும் கடுமையான விதத்தில் திரித்துக் கூறுகின்றனர் என்பதே உண்மை. ஏனெனில் புதிய ஏற்பாட்டில் இந்த ஒரு நிகழ்வுதான் வாரத்தின் முதலாம் நாள் ஒரு கூட்டம் நடந்தது என்பதற்கான ஒரே பதிவாகும், இதை நாம் விசேஷித்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் ஆராயவேண்டும்.
அது ஒரு இரவு ஜெபக்கூடுகை என்பதே முழு உண்மையாகும். “புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டனத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே எழுநாள் தங்கியிருந்தோம். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். பவுல் ஆசோப்பட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை எற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்” (அப்போஸ்தலர் 20:6-13).
துரோவாவில் நடந்த இந்த இரவு நேரக் கூடுகையில் சில வித்தியாசமான நிகழ்வுகள் உள்ளன. முதலில், அது பவுலுக்கும் சபை மக்களுக்கும் ஒரு பக்திவினயமான, தீவிரமான நிகழ்வாக இருந்திருக்கவேண்டும். 25ம் வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார்; “இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பன்னினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லோரும் இனி ஏன் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.”
இந்த வழியனுப்பு கூட்டமானது வாரத்தின் முதலாம் நாளின் இரவு நேரத்தில் நடந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும். அந்த அறையில் விளக்குகள் இருந்தன, மேலும் பவுல் நள்ளிரவு வரையிலும் பேசினார். யூதா முறைப்படி நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். நள்ளிரவிலிருந்து நள்ளிரவு என அஞ்ஞான ரோம முறைப்படி நாட்கள் கணக்கிடப்படவில்லை. வேதத்தின் பிரகாரம், ஒரு நாள் சாயங்காலம் துவங்குகிறது.
சிருஷ்டிப்பின் வாரத்தில் உள்ள எல்லா நாட்களையும் ஆதியாகமம் “சாயங்காலமும் விடியற்காலமுமாகி” என்றே பதிவு செய்கிறது – அதாவது ஒருநாளில் சாயங்காலமே முதலில் வருகிறது.
“அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைபடுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாம்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்” (லேவி. 23:32). ஆனால் வேதத்தின்படி சாயங்காலம் எப்போது துவங்குகிறது? “சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்” (மாற்கு 1:32).
ஓய்வுநாளில் குணப்படுத்துவது தவறென்று பரிசேயர்கள் கற்பித்தத்தால், பிணியாளிகளை இயேசுவிடம் கொண்டுவருவதற்கு அவர்கள் ஓய்வுநாள் முடியும்வரைக்கும் காத்திருந்தனர். எனவே, அவர்கள் “சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது” அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். “உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்த்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து...” (உபாகமம் 16: 6).
நெகேமியாவில், ஓய்வுநாளின் ஆரம்பவேளையைக் குறித்து மற்றுமொரு விளக்கம் நமக்குக் கொடுக்கப்படுகிறது, “ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்பொது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திரவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்” (நெகேமியா 13:19). இது ஓய்வுநாளின் முதல் மணித்துளிகள் சூரிய அஸ்தமனத்திளிருந்து, அதாவது இருட்டத்துவங்கும்போது, துவங்குகிறது என்பதைக் குறிக்கிறது.
இப்பொழுதும் ஒரு முழுமையான வேதாகமக் கோட்பாட்டை துரோவாவில் பவுலின் முதலாம் நாள் கூடுகையில் பொருத்திப் பார்க்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம். இரவு நேரம் என்னும்போது, அந்தக் கூட்டம் ஓய்வுநாள் முடிந்து துவங்கியது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஓய்வுநாள் சூரிய அஸ்தமனத்தில் முடிகிறது. வாரத்தின் முதலாம் நாளும் துவங்குகிறது. பவுலும் ஏழு நாட்களும் அங்கே தங்கியிருந்ததால், அவரால் ஓய்வுநாளிலும் அவர்களுடன் இருக்கமுடியும் என்பதால், அவர் சனிக்கிழமை இரவு செல்லும் கப்பலில் செல்லவேண்டாம் எனத் தீர்மானித்தார். அதற்குபதில், நள்ளிரவுவரை விசுவாசிகளுடன் ஐக்கியத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் தீபகற்பத்தைக் கடந்து 20 மைல் தூரம் நடந்து ஆசோப்பட்டணத்தில் கப்பல் ஏறினார்.
தற்செயலாக, லூக்கவையும் சேர்த்து பவுலின் உடன் ஊழியர்கள், கவனமாகத் திட்டமிடப்பட்ட அந்தக் கப்பற்பயணத்தைக் குறித்த காலத்தைப் பதிவு செய்தார். அவர்கள் ஓய்வுநாள் முடியாமல் சனிக்கிழமை இரவு கடலில் பிரயாணப்படமாட்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க உண்மையாகும். ஓய்வுநாளில் தண்டுவலிப்பதும் கடற்பயணம் செய்வதும் பரிசுத்த நாளில் ஏற்ற காரியமாகப் பவுலுக்குத் தெரியவில்லை. அதற்கு பதில் அவர் ஞாயிறு காலையில் இஸ்துமஸ் என்னும் இடத்தைக் கடந்து 20 மைல்கள் நடப்பதையே தேர்வுசெய்தனர். பவுலோ அவருடன் பயணம் செய்த மற்றவர்களோ தேவனுடைய பரிசுத்த ஓய்வுநாளில் உலகவேளைகளில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.
அத்தியாயம் 8: ஐத்திகு ஏன் ஆலயத்தின் வெளியே விழுந்தான்?
நியூ இங்க்லிஷ் வேதாகமத்தில் அந்தக் கூட்டம் சனிக்கிழமை இரவுதான் நடந்தது என்று குறிப்பிடுகிறது.
இந்தச் சம்பவத்தில் முக்கியமாகப் பார்த்தால் ஜன்னலிலிருந்து விழுந்து மரித்த ஐத்திகுவை எழுப்புவதில்தான் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. சிறிதும் அஞ்சாத பவுல், ஓய்வுநாளை முடித்து, சனிக்கிழமை இரவு முழுவதும் ஊழியத்தை முடித்து, ஞாயிறு காலையில் 20 மைல் நடந்து ஆசோவிலுள்ள தன் நண்பர்களுடன் சேர்ந்து பயணத்தில் இணைந்தார். அந்தக் கப்பல் சனிக்கிழமை இரவு முழுவதும், ஓய்வுநாள் முடிந்தும், தீபகற்பத்தைச் சுற்றிவந்தபோது, அவர்கள் அதில் இருந்தனர். பவுல் மேற்கொண்ட அந்த நீண்டப் பயணமானது எந்த ஒரு பரிசுத்த நாளுக்கும் ஏற்புடையது அல்ல.
சிலர் அப்பம் பிட்குதலை இராப்போஜனத்திற்கு ஒப்பிடுகின்றனர், ஆனால் இக்கருத்திற்கு வேத வசனங்கள் மூலம் ஆதரவளிக்கமுடியாது. ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் அனுதினமும் அப்பம்பிட்குதலில் தரித்திருந்தனர் என்று லூக்கா நிச்சயப்படுதுகிறார். “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும்தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இறுதயத்தோடும்போஜனம்பண்ணி...” (அப். 2:46).
பவுல் விசுவாசிகளுடன் மேல்வீட்டறையில் இராப்போஜனத்தை அனுசரித்தார் என்ற வாதத்திற்கு வேதம் நிச்சயப்படுத்தமுடியாது. அது ஒரு பொதுவான உணவு பகிர்ந்து உண்ணும் நிகழ்வு என உலகத்தார் குறிப்பிடுகின்றனர். “பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியர்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்” (அப். 20:11). இங்கே உணவருந்துதல் அப்பம் பிட்குதலுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அநுதினமும் உண்ணும் உணவை இராப்போஜனத்திற்குக் குறிபிடுவது சாத்தியமில்லாத ஒரு காரியமாகும்.
ஒருவேளை அந்தக் கூட்டத்தில் கிறிஸ்துவின் பாடு மரணம் குறித்த நினைவுகூருதல் இருந்திருந்தாலும் கூட, அது ஞாயிறு ஆசாரிப்பிற்கு எந்த ஒரு அத்தாட்ச்சியையும் கொடுக்கவில்லை. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்திலிருந்து அப்பம் பிட்குதல் தினமும் நடந்ததென்று பார்க்கிறோம். மேலும் எந்த ஒரு இடத்திலும் இராப்போஜனம் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு ஆசாரித்ததைப் போன்று நாம் இதுவரைப் பார்த்ததில்லை. எனவே, துரோவாவில் நடந்த இரவு ஜெபக்கூட்டமானது வழக்கமாக நடக்கக்கூடிய ஒரு ஆராதனை அல்ல என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த இரவு கூடுகையின் முக்கியத்துவம் இளம் வாலிபனான ஐத்திகுவை அதிசயமானவிதத்தில் எழுப்பியதும், அதன்பிறகு பவுலின் மரணத்திற்கு முன் மீண்டும் அவர்களைப் பார்க்கமுடியாது என்பதாலும் நடந்தது. சனிக்கிழமை முழு இரவு என்ற அந்தக் காலநேரம் எந்த ஒரு ஆவிக்குரிய முக்கியத்துவத்தை உடையதாக இல்லை.
அதிசயமான விதத்தில் உயிர்த்தெழுந்த வாலிபனைக் குறித்து உண்மையுடன் பதிவுசெய்த, கவனமிக்க சரித்திரவானான லூக்காவும் பவுலின் நீண்ட பிரசங்கத்தைக் குறித்து எந்த ஒரு குறிப்பையும் பதிவு செய்யவில்லை. இது ஐத்திகு எவ்வாறு ஜன்னலிலிருந்து வெளியே விழுந்தான் என்பதைக் குறித்து இந்த நிகழவு பெசுகிரதேயல்லாமல், எந்த நாளில் அது நடந்தது என்பதைப் பதிவுசெய்ய லூக்கா இங்கே முயலவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இப்பொழுதும் நாம் புதிய ஏற்பாட்டிலுள்ள வாரத்தின் முதலாம் நாளைக் குறித்த எட்டுக் குறிப்புகளையும் ஒவ்வொன்றாக மிகவும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறோம். இதில் தேவன் ஞாயிறை பரிசுத்தப்படுத்தி மனிதன் அதை ஆசரிக்க ஏற்படுத்தினார் என்பதற்கு ஒரு சிறு ஆதாரம்கூட அளிக்கவில்லை. தேவனுடைய மாறாத பாடப்புத்தகமானது பெரும்பாலான மக்கள் சத்தியத்தைக் காட்டிலும் பாரம்பரியத்தையே பின்பற்றுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பலகோடி மக்கள் குருட்டுத்தனமாக அஞ்ஞான வேற்று அடையாளத்தினால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருமுறை ஒரு ரஷ்ஷிய பேரரசர் தன்னுடைய விஸ்தாரமான அரண்மனை மைதானங்களின் ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்ட கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. அங்கே ஒரு காவலாளி துப்பாக்கி ஏந்தியவனாக பிரகாரத்தின் மதிலின் ஓரத்தில் இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். அவர் வேளையில் இருந்த அந்தக் காவலாளியிடம் அவன் எதைக் காவல் காக்கிறான் எனக் கேட்டார்.
அதற்கு அவன் மறுமொழியாக, அவன் எதற்காக அந்தக் குறிப்பிட்ட இடத்தில் வேலைக்கு நிறுத்தப்பட்டான் என்று அவனுக்கு தெரியாது, மேல் அதிகாரியின் கட்டளைகளை மட்டுமே பின்பற்றுகிறேன் என்று கூறினான். அந்தப் பேரரசர் அந்தக் காவாலாளியின் மேலதிகாரியிடம் கேட்க அவனுக்கும் அதைக் குறித்து ஒன்றும் தெரியவில்லை. அந்த அரண்மனை காவலுக்கு அதிகாரியை விசாரித்தறிந்தபோது, அவனால் அந்த வேலைக்கானக் காரணத்தை அவருக்குக் கொடுக்கமுடியவில்லை. இறுதியில், அந்த அரசர் தூசிப்படிந்த இராணுவப் பதிவேடுகளைத் தேட ஆணைக் கொடுத்தார், பின்னர் அந்த இரகசியம் வெளியே வந்தது. பல வருடங்களுக்கு முன், அரசருடைய தாய் சில ரோஜா செடிகளை அந்த மூலையில் நட்டுவைத்திருக்கிறார். அந்த இளஞ்செடிகளைப் பாதுகாக்க ஒரு காவலாளி அந்த இடத்திற்கு அனுப்பபட்டார். பின்னர், அந்த ஆணையை ரத்து செய்ய மறந்துபோனதினால், ரோஜா செடிகள் ஏதுமற்ற வெற்றிடத்தை காவல் காக்க தினமும் துப்பாக்கி ஏந்திய ஒரு காவலாளி வழக்கத்தின்படி அங்கே பலவருடங்களாக அனுப்பப்பட்டுள்ளான்.
இன்று பலகோடி கிறிஸ்தவர்கள், ஆவிக்குரிய விதத்தில் ஞாயிற்றுக்கிழமையின் பரிசுத்தத்தைப் பாதுகாக்க முயன்றுகொண்டிருக்கின்றனர். அங்கே பாதுகாக்க எதுவும் இல்லை என்பதை அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். வாரத்தின் முதலாம் நாள் என்பது ரோஜாக்கள் இல்லாத வெற்றிடத்தைப்போலவே பரிசுத்தமேதுமற்ற ஒரு நாளாகும். “அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்” (மத்தேயு 15:13) என்று இயேசு கூறினார்.
அத்தியாயம் 9: அவர்கள் ஆசரித்த நாள்
இப்பொழுதும் நாம் ஞாயிறு ஆசாரிப்பிற்கான அனைத்து ஆதாரங்களையும் பார்த்து முடித்ததாலும், அதில் எந்த ஒரு சிறிய தடயமும் கிடைக்காததாலும், அந்த ஆரம்பக்கால கிறிஸ்தவ சபையின் ஆவிக்குரிய வரலாற்றைப் பார்ப்போம். அவர்கள் வாரத்தின் முதலாம் நாளை ஓய்வுநாளாக ஆசாரிக்கவில்லையென்றால் பின் எந்த நாளை ஆசரித்தார்கள்? அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் ஏழாம் நாள் ஓய்வுநாள் ஆசரிப்பைக் குறித்து சீரான முரணற்ற ஒரு முறையைத் தெரிவிக்கிறது. ஒரு சமயத்தில், புறஜாதிகள் பவுலை ஒரு ஓய்வுநாளில் தங்களுக்கு ஒரு விசேஷமான ஆராதனையை நடத்தவேண்டுமென விண்ணப்பம் செய்கிறார்கள். “அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்...அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்” (அப். 13:42, 44).
இந்த சக்திவாய்ந்த வசனங்களில் பவுல் மற்றும் அவருடன் இருந்த கிறிஸ்தவர்களுடைய ஓய்வுநாள் ஆசரிப்பைக் குறித்த மிகவும் ஆர்வமூட்டும் சில கருத்துகள் உள்ளன. புரஜாதிகம் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லாத ஜெப ஆலயத்தில் பிரசங்கித்து முடித்தவுடன், “அடுத்த ஓய்வுநாளில்” தங்களுக்கும் பிரசங்கம் செய்யுமாறு பவுல் புறஜாதிகள் சூழ்ந்துகொண்டார்கள். ஜெப ஆலயங்களில் பவுலுக்கு செவிசாய்க்கும் ஓர் கூட்டம் எப்போதும் இருப்பதால் அவர் ஜெப ஆலயங்களில் மட்டுமே பிரசங்கிக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தது. இது ஒரு பொய்க்குற்றச்சாட்டகும். இந்தச் சம்பவத்தில் பார்க்கும்போது, 43வது வசனத்தின்படி அடுத்த ஓய்வுநாளில் புறஜாதிகளிடத்தில் ஊழியம் செய்யப்போவதாகப் பவுல் இங்கே ஒரு முன்னேற்பாட்டைச் செய்கிறார். அன்றைய நாளில் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டவர்களில் அநேகர் “புதிய விசுவாசிகள்” ஆவர். அப்படியென்றால், அவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்திற்குப் புதிதாக மாறியுள்ளார்கள் என்று அர்த்தம். பவுலும் பர்னபாவும் அவர்கள் “தொடர்ந்து தேவனுடைய கிருபையில் இருக்கும்படி” அவர்களை வலியுறுத்தினார்கள்.
அவர்களுடைய ஓய்வுநாள் ஆராதனையானது தொடர்ந்து அவர்கள் தேவனுடைய கிருபையில் வளரவேண்டுமெனப் போதித்தது எத்தனை ஆச்சரியமாக உள்ளது! ஓய்வுநாளைக் குறித்து குறைகூறும் நவீனகால விமர்சகர்கள் ஓய்வுநாளை ஆசாரிப்பவர்களை சட்டவாதிகள் என்றும், அவர்கள் கிருபையின் சுவிசேஷத்திற்கு தூரமானவர்கள் என்றும் முத்திரையிடப் பார்க்கிறார்கள்!
ஆனால் விசுவாசத்தினால் வரும் மெய்யான இரட்சிப்பை கீழ்ப்படிதலுடன் தொடர்புபடுத்தும் வேதாகம ஆசிரியர்கள் இவர்களைப்போல இல்லை.
அப்போஸ்தலர் 16:13ல், ஜெப ஆலயமோ, யூதர்களோ இல்லாதபோதும் பவுல் ஓய்வுநாளை ஆசரித்தார் என்ற நேர்மறையான ஆதாரத்தை நாம் வைத்துள்ளோம். அவர் கிரேக்க தேசத்தில், எங்கே ஒரு சில யூதர்கள் மட்டுமே இருந்தார்களோ, எங்கே ஜெப ஆலயம் இல்லையோ, அங்கே அவர் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவர் ஓய்வுநாளில் என்ன செய்தார்? “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரிகளுக்கு உபதேசித்தோம்.”
ஆராதனை செய்ய ஆலயம் இல்லாதபோதும், அப்போஸ்தலன் ஆவிக்குரிய ஆராதனை நடத்தும்படியாக ஓர் இடத்தைத் தேர்வுசெய்தார். அது ஆற்றினருகே ஜெபம்பண்ணுவதற்கு ஏற்ற இடமாகும், அங்கே வந்தவர்களுக்கெல்லாம் அவர் பிரசங்கம் செய்தார். இந்த வெளிப்புற ஊழியத்தில் நாம் பவுலைத் தொடர்ந்து செல்லும்போது, உண்மையாகவே, ஓய்வுநாளைக் குறித்த அவருடைய ஆழமான அர்ப்பணிப்பை வகையறுக்க ஒருவரும் தவறிப்போக முடியாது. ஒருவேளை மக்கெதோனியாவில் நடந்த இந்த அனுபவம் ஓய்வுநாளுக்கு பதில் வாரத்தின் முதாலாம் நடந்திருந்தால்? எந்தக் கேள்விக்கும் இடமின்றி, அது ஞாயிறு ஆராதனைக்கான துல்லியமான ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், மேலும் நாமும் அதற்கு உடன்பட்டிருக்கவேண்டும். ஆனால் பவுலின் இந்த உண்மையான ஓய்வுநாள் ஆசரிப்பிற்கு எதிராக என்ன விவாதங்களை ஒருவர் முன்வைக்கக்கூடும்?
மீண்டும் பவுலின் கலாச்சார வழக்கத்தை இந்த வசனத்தில் நாம் படிக்கலாம், “பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாங்களை எடுத்து அவர்களுடனே சம்ப்பஷித்து...” (அப்போஸ்தலர் 17:2). “ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்” (அப்போஸ்தலர் 18:4).
இறுதியாக, பவுல் தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள்கூட ஞாயிற்றுக்கிழமையைப் பரிசுத்தமாக ஆசாரிக்கவில்லை என்ற அவருடைய தனிப்பட்ட சாட்சியை நாம் குறிப்பிடுகிறோம். அவருடைய மரணத்திற்கு முன், யூதா தலைவர்களிடம் இப்படி ஒரு வல்லமை வாய்ந்த வாக்கியத்தைப் பவுல் கூறினார், “சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்” (அப்போஸ்தலர் 28:17).
ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்! ஒருவேளை பவுல் ஓய்வுநாளை வேண்டுமென்றே மீறியிருந்தால், அல்லது எழாம்நாளைத் தவிர்த்து வேறொரு நாளை ஆசாரித்திருந்தால், அவரால் உண்மையாக யூதா முறைமைகளுக்கு எதிராக தான் எதுவும் செய்ததில்லை என்று கூரியிருக்கமுடியாது. குற்றம் சாட்டமுடியாத நேர்மையான ஒரு நபரால் சொல்லப்பட்ட இந்த தகுதிவாய்ந்த உறுதியான அறிவிப்பின் பெலத்தின்மேல், ஞாயிறு ஆசரிப்பைக் குறித்த அதிகாரத்தை வேதத்தில் தேடுவதை நாம் நிறைவுசெய்கிறோம். அப்படியொரு காரியம் வேதத்தில் இல்லை.
எவ்வித சந்தேகமுமின்றி, நம்முடைய ஆவிக்குரிய கடமையானது நிறைவேற்றுவதற்கு மிகவும் சுலபமானது என்பதை நாம் கண்டறிய முடிந்திருந்தால், உலகத்தின் மாபெரும் ஸ்தாபனங்களான ப்ரொட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிகக்க சபைகளுடைய ஆதரவையும் சாட்சியையும் பெற்றிருப்போம்.
ஆனால் நாம் மிகவும் பிரபலமான அல்லது சுலபமான வழியை எதிப்பார்க்கவில்லை; நாம் வேதத்தின் வழியையே நோக்கியிருக்கிறோம். அதையும் நாம் கண்டுபிடித்துவிட்டோம். இப்பொழுதும் வழக்கத்திலுள்ள, வேறொரு நாளை ஆசரிக்கும் சபையின் கலாச்சாரப் பழக்கமானது தேவனால் எழுதிகொடுக்கப்பட்ட அவருடைய பிரமாணத்திற்கு முரணாக உள்ளது என்பதை நாம் எல்லா நேர்மையோடும் அறிவிக்கவேண்டும்; இறுதியில் நம்மை நியாயந்தீர்க்கப்போவதும் இந்தக் கற்பனைகளே. “கர்த்தர் உரைக்கிறார்” என்ற வெளிப்படையான வலிமைவாய்ந்த சாட்சியை எந்த ஒரு பிரபலமான அல்லது பெரும்பான்மையின் கருத்தும் ரத்து செய்யமுடியாது. இந்தக் காரியத்தில் நாம் வேதம், வேதம் மட்டுமே என்ற கோட்பாட்டிற்கு மேல் நிற்கவேண்டும்.
“ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே...யாதொரு வேலையும் செய்யவேண்டாம்” (யாத். 20:10). தேவன் தம்முடைய ஒழுக்கப்பிரமாணத்தை ரத்து செய்தார் என்பதற்கும், அதை மாபெரும் வல்லமையோடும், மகிமையின் பிரதாபத்தோடும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பதற்குமான ஏதேனும் சில குறிப்புகள் வேதத்தில் நாம் கண்டறியும்வரை, பத்து பிரமாணம் இன்றும் ஏற்புடையதாகவும், நம்மைக் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். ஏனெனில், தேவன் தாம் என்ன சொன்னார் என்பது அவருக்குத் தெரியும், மேலும் அதைத் தெரிந்துதான் அவர் சொன்னார்.
நாம் ஒரு போட்டிமனப்பான்மையுள்ள, தொழில்மயமான சமுதாயத்தில் நம் வாழ்வாதரத்திற்காக சம்பாதிக்க வேண்டுமென்பதால், ஏழாம்நாளை ஆசாரிப்பது சாத்தியமற்ற ஒரு காரியம், மேலும் அந்த நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளுவதிலிருந்து அவர் நம்மை விலக்குகிறார் என்று சிலர் வாதாடுவார்கள். சாத்தான் ஓய்வுநாளை ஆசாரிப்பவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த உலகத்தை பாதகமான விதத்தில் மாற்றியமைத்துள்ளான் என்பது சந்தேகமேதுமற்ற உண்மையாகும், ஆனால் தேவன் நம்மால் முடியாததை நம்மிடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. எந்த ஒரு காரணத்திற்காகவும் தேவனுடைய ஒரு கற்பனையையும் மீறி நடப்பது அவசியமற்றதாகும்.
“ஆனால் என்னுடைய முதலாளி என்னை சனிக்கிழமையில் வேலைக்கு வரச்சொல்கிறார், என்னுடைய குடும்பம் பசியிலும் பட்டினியிலும் விடுவதற்கு என்னால் முடியாது” என்று நீங்கள் கூறலாம். இந்தக் குழப்பத்திற்கான பதிலை நூற்றாண்டுகளுக்கு முன், மலைப்பிரசங்கத்தில் நம்முடைய தேவன் கொடுத்துள்ளார். “முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று அவர் கூறினார். “இவைகளெல்லாம்” என்றால் உணவு, உடை, மற்றும் வேலை என்று அதற்கு முந்தைய வசனம் விளக்குகிறது. உங்கள் அதிகாரிக்குக் கீழ்ப்படிவதிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதிலும் உங்களுக்கு முரண்பாடு ஏற்பட்டால், நாம் தேவனையே முதலாவது வைக்கவேண்டுமென்று இயேசு எளிமையாகச் சொல்கிறார். தேவனுடைய சித்தத்தை செய்வதற்கு மேலாக உலகப்பொருட்களைக் குறித்த கருத்துகள் முதன்மையாக்கப்படக்கூடாது.
ஒவ்வொரு காரியத்திலும், தன்னுடைய வேலைக்கு என்ன பாதிப்பு வந்தாலும் ஓய்வுநாளை ஆசாரிக்கத் தீர்மானிக்கும் கிறிஸ்தவனுடைய விசுவாசத்தை தேவன் கனம்பண்ணுகிறார். பல நேரங்களில் ஓய்வுநாளை ஆசாரிப்பவர்களுக்கு விசேஷித்த ஆயத்தங்களை செய்வதன்மூலம் தேவன் அதிசயங்களை நடப்பிக்கிறார். சில நேரங்களில், தங்கள் வேலைகளை விடும்படி அவருடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார், பின்னர் அவர்களுடைய விசுவாசத்திற்கான பதிலாக அவர் சிறந்த வாய்ப்புகளைத் திறக்கிறார். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நாம் அவரை நம்பிக் கீழ்ப்படியும்போது, “இவைகளெல்லாம்” எப்பொழுதும் சேர்த்துக்கொடுக்கப்படுகிறது.
தேவனுடைய ஓய்வுநாளை ஆசாரிப்பதற்கான உண்மையான இரகசியம் என்னவென்றால், ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறவரை நமது உள்ளத்தில் கொண்டிருப்பதாகும். தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமற்போவதைப் பார்க்கிலும் மரணத்தைத் தேர்ந்தேடுக்கவைப்பது அவர் பேரில் கொண்டிருக்கும் அன்பே காரணமாகும். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15). அபோஸ்தலனாகிய யோவான் அன்பை இவ்வாறு விளக்கினார், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” (1 யோவான் 5:3).
எனவே, இது ஒரு நாளைக் குறித்தக் கேள்வி அல்ல, ஒரு வழியைக் குறித்தக் கேள்வியாகும் – ஆம் அன்பின் மூலம் கீழ்ப்படிதலின் வழியில் நடப்பது அல்லது அன்பில்லாமையினால் கீழ்ப்படியாமைக்குள் நடப்பது. இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், மறக்கவேண்டாம்!
ஓய்வுநாளை, அதாவது உண்மையான ஏழாம் நாள் ஓய்வுநாளை ஆசாரிப்பதென்பது தேவன்மீதான அன்பு மற்றும் பக்தி நிரம்பிய உள்ளத்திலிருந்து வரவில்லைஎன்றால் அது ஒரு பயனற்றக் கிரியையாகும். அன்பு இல்லாமல், பிரமானத்திற்குக் கீழ்ப்படிவதென்பது இயந்திரத்தனமாகவும் பரிதாபகரமாகவும் மாறிவிடும். ஆனால் அன்பினால் கைக்கொண்டால், ஒவ்வொரு பிரமாணத்தையும் கைக்கொள்வது சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்தத் தனிப்பட்ட அன்பின் உறவை உங்கள் ஓய்வுநாள் ஆசாரிப்பிற்கான அடித்தளமாக வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த நாள் வாரத்தின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

