சோதனையை எதிர்ப்பதற்கான உதவிக் குறிப்புகள்
CONTENTS
| அடிப்படை உண்மைகள் |
| பலனை நினைவுகூருங்கள் |
| பாவம் தரக்குறைவானது என்பதை நீங்கள் நம்பவேண்டும் |
| பணத்தை விரும்பவேண்டாம் |
| ஓடுவதற்குத் தயாராயிருங்கள் |
| கூட்டத்தைப் பின்பற்றாதிருங்கள் |
| சுறுசுறுப்பாக இருக்கத் திட்டமிடுங்கள் |
| ஒரு திட்டத்தை வைத்திருங்கள் |
| உங்களை அறியுங்கள் |
| தேவனுடன் இணைந்து தீமையை மேற்கொள்ளுங்கள் |
| உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள் |
| தப்பிக்கும் வழியைக் கண்டறியுங்கள் |
| விழுகையில் தப்பிப் பிழைப்பது |

ஓர் அற்புதமான உண்மை
விர்ஜினியாவிலுள்ள ஒரு இளம்பெண் தன் வீட்டின் பின்புறத்தில் இருதலை ஆமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அதைப் பிடித்த அவள், தான் கொடுத்த சிறு உணவிற்காக அவ்விரு விசித்திரமானத் தலைகளும் சண்டைப் போட்டுகொண்டிருந்ததைப் பார்த்தாள். இரண்டு தலை என்பது எல்லா உயிரினிடத்திலும் இருக்கக்கூடிய ஒன்றாகும், ஆனால் அதன் வாழ்நாள் குருகினதாக இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. ஏனென்றால், இருதலைகளும் தனிப்பட்ட விதத்தில் சுதந்திரமாக வேலை செய்யவும், அந்தந்தப் பக்கத்து உடலை அந்தந்த தலைகள் கட்டுப்படுத்தவும் செய்வதால் அவை பிரிவினையையும், குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் விளைவிக்கும். ஏதேனும் ஒரு தலை முதன்மையானக் கட்டுப்பாட்டை எடுக்கவில்லையென்றால் அந்த உயிரினம் பசியினாலும், தீர்மானம் எடுக்கமுடியாமலும் சீக்கிரமாகவே மரித்துப்போகும்.
முன்னுரை - அடிப்படை உண்மைகள்
பாவம் உலகத்தில் நுழைந்ததுமுதல், ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திற்குள்ளும் மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையேயான ஒரு போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. தேவனை சேவிக்க விரும்பும் ஒவ்வொரு நபரும் எதிரெதிரான இவ்விரண்டிற்கும் இடையேயான போராட்டத்தை உணரமுடியும். மேலும், தேவனுடனான நமது உறவைத் துண்டிப்பதற்காக நமது சரீர மற்றும் உணர்வு ரீதியான வாஞ்சைகளை சாத்தான் சூரையாடிக்கொண்டேயிருக்கிறான். “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது” (ஏசாயா 59:2). ஆதாம் ஏவாளை சோதிக்கும் சர்ப்பத்திலிருந்து வேதம் துவங்கி, அதன்பின் உலகம் எவ்வாறு படிப்படியாகச் சீரழிகிறது என்பதைக் குறித்துப் பேசுகிறது. புதிய ஏற்பாடோ இயேசு சாத்தானால் சோதிக்கப்படுவதிலிருந்து துவங்கி உலகத்தின் மீட்பைக் குறித்துப் பேசுகிறது. தோட்டத்தில் நடந்த அந்த நுட்பமான சோதனையில் மனுக்குலம் விழுந்தபிறகு, தூய்மையான அன்பின் நோக்கங்களுடன் தேவன் படைத்தவை யாவும் தொலைந்துபோயின. அதற்குப் பதிலாக சுயம் ஆக்கிரமித்து, அதன் விளைவு மோசமானதாக மாறியது. அதாவது, மரணம், நோய், போர், குற்றம், வலி என இப்பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.
தேவன் நம்மைப் பரிசுத்தத்துதிற்கென்று அழைத்திருக்கிறார். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15, 16). ஆனால் தேவனுடைய வல்லமையின்றி, ஆண்களும் பெண்களும் மாம்சமான இருதயத்தின் தீமையான ஆசைகளையும், நோக்கங்களையும் எதிர்கொள்வதற்கு வல்லமையற்றிருக்கிறார்கள்.
எனினும் அவருடைய உதவியுடன்கூட செய்யமுடியாத எந்தக் காரியத்தையும் அவர் நம்மிடம் செய்யும்படி ஒருபோதும் கேட்பதில்லை. கலகம் செய்யும் அவருடைய சிருஷ்டிகளை அவர் கைவிட்டுவிடவில்லை, மாறாக அவர்களை மீண்டும் புதுப்பிப்பதற்கான முழுமையான இறுதி முன் ஏற்பாட்டை அவர் செய்துவிட்டார். உங்களுக்குள்ளும், எனக்குள்ளும், கிறிஸ்துவின் சாயலை புதுப்பிப்பதே அவருடைய மீட்பின் திட்டத்தினுடைய நோக்கமாகும்; அதன்மூலம் நாம் தேவனுடைய புத்திரர்களென அழைக்கப்படுவோம். “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிவிக்கிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” (2 பேதுரு 1:3, 4).
சோதிக்கப்படுவதே பாவம் என்று அநேகர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நம்முடைய பெலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4:15) என்று வேதம் கூறுகிறது. வனாந்திரத்தில் இயேசு சோதிக்கப்பட்டார். எனவே, அது ஒரு பாவமாக இருக்க சாத்தியமில்லை. ஆனால், சோதனையில் விழுவது பாவமாகும். “சோதிக்கப்படுதல் என்பது வேறு, சோதனையில் விழுவதென்பது வேறு” என்று ஷேக்ஸ்பியர் எழுதினார். நாம் என்ன செய்யவேண்டுமென்பதை நம்முடைய மாம்ச சிந்தை நமக்குக் கட்டளையிட கிறிஸ்தவர்கள் அனுமதிக்கக்கூடாது; அவர்களுடைய மாம்சமல்ல, ஆவியானவரே அவர்களை வழிநடத்த அவர்கள் அனுமதிக்கவேண்டும்.
நாம் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றவிரும்பினால், அவருடைய சித்தத்திற்கு எதிராக உள்ள நமக்குத் தெரிந்த செயல்களையும், சிந்தனைகளையும் எதிர்ப்பதற்கு நாம் தீர்மானம் செய்யலாம். இயேசுவின் மூலம் தீமையை எதிர்ப்பதற்கும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக மாறுவதற்கும் எல்லாவற்றையும் அருளிச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இதனால் நாம் இயல்பாக, “நான் கிறிஸ்துவின் பின்னடியாராக இருப்பதால், சோதனையை எதிர்ப்பதற்கு இயேசு என்ன செய்தார்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். அவர் வேதத்தை மேற்கோள் காட்டினார் என்பது ஒரு காரியமாகும். தேவனுடைய வார்த்தையைக் குறித்த அறிவே சோதனையை எதிர்ப்பதற்கான முதல் மற்றும் இறுதி ஆயுதமாக உள்ளது. “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்கீதம் 119:11). இரண்டாவதாக, நாம் ஜெபம் செய்யவேண்டும்! இயேசுவும் சோதனையை எதிர்க்க ஜெபம் செய்தார். “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்” (மாற்கு 14:38). தேவனுடைய வார்த்தை மற்றும் ஜெபம் என்ற இவ்விரண்டு அடிப்படைக் காரியங்களை மட்டும் வைத்து ஒரு முழு புத்தகத்தை எழுதி எளிதாக என்னால் விவரிக்கமுடியும். ஆனால் இந்த அடிப்படை சத்தியங்களை அஸ்திபாரமாக வைத்து, சோதனையை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளவும் தேவையான பன்னிரண்டு நடைமுறைக் குறிப்புகளை எழுதவேண்டுமென்று நினைக்கிறேன். மேலும் நீங்கள் சோதிக்கப்படும்போது, இயேசு எவ்வாறு வேதவாக்கியங்களைப் பேசினாரோ அதேப்போல நீங்களும் உபயோகிப்பதற்கான சில வேதாகம வசனங்களையும் உங்களுக்கு நான் கொடுக்க விரும்புகிறேன். இந்த அடிப்படை வேதாகமப் படைத்தளவாடங்களும், முனைப்பான மற்றும் தொடர்ச்சியான வேத தியானங்களும், தொடர் வெற்றிகளைப் பெறுவதற்கு உங்களை வழிநடத்துமென விசுவாசிக்கிறேன்.
#1 பலனை நினைவுகூருங்கள்
“விடியலைக் குறித்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், இருளைத் தாக்குப் பிடிப்பது சுலபமானதாகும்.”
எல்லோரும் சோதனைக்குள் சுலபமாக விழுவதற்கு ஒரு காரணம் அவர்கள் நித்தியத்தைக் குறித்த தங்களது நோக்கத்தை இழந்துபோவதால்தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும். மகிமையுள்ள பிரகாசத்துடன் ஒரு தேவதூதன் இப்பொழுது உங்கள்முன் தோன்றி, “மனந்திரும்பு, இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கூறினால் அந்நாள் முழுவதும் சோதனைகளை ஜெயிப்பது உங்களுக்கு சுலபமாக இருக்குமா? நிச்சயமாக, ஏனென்றால் உங்களுக்கானப் பலன் உண்மையானது மற்றும் மிக அருகில் உள்ளது என்பதால் உங்கள் விசுவாசம் பெலபடுத்தப்படும்.
எபிரெயர் 11:24-26 இவ்வாறு கூறுகிறது, “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.”
எகிப்து தனது வல்லமை மற்றும் செல்வத்தின் உச்சத்தில் இருக்கும்போது அதை ஆளும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. அந்தப் பதவியின் செல்வாக்கானது எவருக்குமே பயங்கரமான ஒரு சோதனையாகத்தான் இருந்திருக்கும். ஆனால் மோசேயோ, தேவனுடைய நித்திய பலனை நோக்கினான், அதனால் அவனால் சாத்தானுடைய தற்காலிகமான உலக செல்வத்தின் சோதனையை எதிர்த்து நிற்க முடிந்தது.
தேவன் உங்களுக்காக இருப்பில் வைத்திருக்கும் மகிமையை நீங்கள் மறந்துபோகவேண்டாம். “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரிந்தியர் 2:9). நீங்கள் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உண்மையாகவே நீங்கள் விசுவாசித்தால், சோதனையை ஜெயிப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். இரட்சிக்கப்படுவதற்காக நீங்கள் சுயமாகச் செயல்படலாம் என்று தவறாக நினைத்தால், சோதனையை எதிர்க்கக்கூடிய ஆற்றலை நீங்களே அழித்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கும்போது, தேவனுடைய பிள்ளையைப் போல நடந்துகொள்வது மிகவும் சுலபமாகும்.
“ஆதலால், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18). நீங்கள் ஒரு விருந்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் உள்ள அற்பமான மிட்டாயை மேற்கொள்வதென்பது சுலபமானதாகும்.
#2 பாவம் தரக்குறைவானது என்பதை நீங்கள் நம்பவேண்டும்
மேலும், பலன் இருக்கிறதோ இல்லையோ, அது எவ்வளவு கெட்டது என்பதையும் நீங்கள் நம்பவேண்டும். பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும்...” என்று பவுலும் கூறுகிறார். (ரோமர் 7:13). பாவம் மிகவும் கோரமானது என்பதை நீங்கள் உண்மையாகவே அறிந்திருக்கவேண்டும், இதை நீங்கள் நினைவுக்கூறவேண்டுமானால், 2000 வருடங்களுக்குப் பின்னாகக் கல்வாரிக்குச் சென்று பாவம் இயேசுவுக்கு என்ன செய்ததென்று பாருங்கள். பாவம் அருவருப்பானதும், தீயதும், மரணத்திற்கேதுவானதுமாக இருப்பதால், கிறிஸ்தவர்களான நாம் அதைத் தழுவிக்கொள்ள முடியாது. பாவமே நமக்கன்பான இயேசுவிற்கு மரணத்தை ஏற்படுத்தியது.
“ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (யோபு 1:1) என்று வேதம் கூறுகிறது. ‘தேவனை நேசிக்கிறோம்’ என்று சொல்லகூடிய அடிப்படை உணர்வுக்கு அப்பாற்பட்டு நாம் கடந்து செல்லவேண்டியிருக்கிறது. யோபு செய்ததைப்போல, தேவனை நேசிப்பதின் ஒரு பகுதி தீமையை வெறுப்பதாகும். தேவன் பாவத்தை வெறுப்பதால், நாமும் பாவத்தை வெறுக்கவேண்டுமென்று விரும்புகிறார். “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்” (சங்கீதம் 119:104).
பாவத்தை விரும்பக்கூடியதும், வசீகரமானதுமாக சாத்தான் காட்ட முயற்சிசெய்யும்போது வஞ்சிக்கப்படவேண்டாம். மிகவும் கேடான மற்றும் சீரற்ற காரியங்களைத் தூய்மையானதும் அபாயமற்றதாகவும் மாற்றுவதில் அவன் கைத்தேர்ந்த மேதையாவான். ஆனால், நீங்கள் தவறாக வழிநடத்தப்படவேண்டாம், ஏனெனில், அந்த அழகியத் தோற்றமானது இறுதியில் உங்களையே கொன்றுவிடும். தேவனை நீங்கள் அதிகமாக நேசிப்பதால், வேண்டுமென்றே பாவம்செய்து தேவனைத் துன்பப்படுத்துவதைப் பார்க்கிலும் மரித்துப்போவது சிறந்தது என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
“நீங்கள் செல்ல நினைப்பதற்கும் அதிகமான தூரத்திற்குப் பாவம் உங்களைக் கொண்டுபோய்விடும், நீங்கள் தங்க நினைப்பதற்கும் அதிகமான நேரம் உங்களைத் தங்கவைத்துவிடும், நீங்கள் கொடுக்க நினைப்பதற்கும் அதிகமான விலையைக் கொடுக்க வைத்துவிடும்.”
#3 பணத்தை விரும்பவேண்டாம்
தனித்தனி சோதனைகளைக் குறித்தப் பட்டியலைத் என்னால் எழுதமுடியும், ஆனால் விசேஷமாக நான் ஏன் பணத்தைத் தேர்வு செய்தேன் என்றால், பெருமைக்கு அடுத்ததாக வருவது பணமே. நான் கூறவிரும்பும் பணம் காகிதங்கள் அல்ல, மாறாக அது உலகப்பொருட்கள் மற்றும் வல்லமையைக் குறித்ததாகும். கிறிஸ்தவர்கள் தங்களால் முடிந்தவரைக் கடினமாக உழைக்கவும், சம்பாதிக்கவும், சேர்த்து வைக்கவும், பிறருக்குக் கொடுக்கவும் வேண்டுமென்று நான் விசுவாசிக்கிறேன். எனினும், பணம் நம்முடைய கடவுளாக மாறக்கூடிய தொடர் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” (1 தீமோத்தேயு 6:9). துரிதமாகப் பணக்காரர்களாவதற்குத் தங்களுடைய சேமிப்பிலிருந்து சூதாடி முட்டாள்தனமான தேர்வுகளை செய்யும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்தும் இயந்திரத்தின் கைப்பிடியைத் தொடர்ந்து வேகமாகவும் வலிமையாகவும் பிடித்து இழுக்கிறார்கள். இன்னும் ஒருமுறை முயற்சித்தால் ஒரு பெரிய அளவிலான பணத்தை சம்பாதித்துவிடலாம் என்று சாத்தான் அவர்களிடம் சொல்வதினாலேயே. ஆத்துமாக்களை மீட்பதற்காகப் பயன்படுத்தவேண்டிய பணத்தை அவர்கள் வீணாக வெளியே தூக்கி எறிகிறார்கள் என்பதே உண்மை.
“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்தேயு 6:24). தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்வதென்பது சாத்தியமற்றதாகும். பணம் என்பது ஒரு வல்லமைதான், மேலும் எல்லா வல்லமையும் தவறானதும் அல்ல. பணம் என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போன்றதாகும் – அதை நன்மைக்கானாலும், தீமைக்கானாலும் பயன்படுத்தமுடியும். தேவன் நமது பொருளாதாரத் தேவைகளை சந்திக்கவேண்டுமென்று நாம் நமது சபைகளில் ஜெபிக்கிறோம், ஆனால், பணத்தை விரும்பக்கூடிய அடிமைகளாக மாறுவதற்கு நாம் விரும்பவில்லை. உங்கள் இருதயம் உங்கள் பணத்தின்மீது இருந்தால், அது தேவனிடம் இருக்கமுடியாது. நாம் மீன்கள் நிறைந்திருக்கும் வலைகளையும், வரிவசூலிக்கும் இடங்களையும், சொத்துக்கள் நிறைந்திருக்கும் வீடுகளையும் விட்டுவிட்டுத், திரும்பிப்பார்க்காமல் வெளியேற ஆயத்தமாகவேண்டுமென்று தேவன் கூறியிருக்கிறார். “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” (லூக்கா 17:32).
#4 ஓடுவதற்குத் தயாராயிருங்கள்
சோதனையிலிருந்து தப்பித்து ஓடுவதில் ஒரு சிலரே சாதனைப் படைத்திருக்கிறார்கள். சிலர், சோதனை இவர்களை தொடர்ந்துப் பிடித்துகொள்ளும் என்ற நம்பிக்கையோடே மெதுவாக ஊர்ந்து செல்லுவார்கள். சில நேரங்களில் நாமாக வேண்டுமென்றே திறந்துவைத்திருக்கும் கதவின் வழியாகச் சோதனை வருவதுண்டு. கைபிசகாக உங்களுடைய உடை முழுவதிலும் மண்ணெண்ணை சிந்திவிட்டது, மேலும் உங்களுக்கருகில் இருப்பவர் தீக்குச்சியைப் பற்றவைத்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எங்கே செல்வீர்கள்? எவ்வளவு தூரத்திற்குச் செல்லமுடியுமோ அவ்வளவு தூரத்திற்கு, எத்தனை வேகமாக ஓடமுடியுமோ அத்தனை வேகமாக ஓடுவீர்கள் அல்லவா? சோதனையைக் குறித்தும் இப்படிப்பட்ட மனப்பான்மையே ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டும். “வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள்,” “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்று பவுல் கூறினார் (1 கொரிந்தியர் 6:18; 10:14). எனவே, பாவத்தைவிட்டு விலகி ஓடுங்கள். மேலும், மீண்டும் அது உங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய முகவரியை அதனிடம் விட்டுச்செல்ல வேண்டாம்.
இதைத் தவறவிட வேண்டாம்: சோதனையைவிட்டு நீங்கள் விலகி ஓடும்போது, நீங்கள் தேவனை நோக்கிச் செல்லுங்கள். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (யாக்கோபு 4:8). ஒன்றை பாவமென்று நீங்கள் கண்டறியும்போது, பிசாசுடன் ஈடுபடவோ அல்லது நட்புவைத்துக்கொள்ளவோ வேண்டாம். ஏனெனில், தவறை சரியென்று நமது பகுத்தறிவிற்கேற்ப விளக்கமளிப்பதில் அவன் கைத்தேர்ந்தவனாவான் – ஏவாளும் இப்படித்தான் விழுந்தாள்!
தங்கள் பாவங்களை நியாயப்படுத்தும் கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, அது என் இருதயத்தை உடைக்கிறது. உங்களை வசியப்படுத்த சாத்தான் கொடுக்கும் வாதங்களுக்கு அளவில்லை. ஒன்று தவறென்று உங்களுக்குத் தோன்றும்போது, உடனே அங்கிருந்து ஓடுங்கள்! தைரியமான மனிதன் சோதனையைக் கண்டவுடன் ஓடுகிறான்; மூடனோ அதனுடன் விளையாடுகிறான்.
உங்களுக்கு வயதாகி, உங்கள் வாலிபத்தின் வாஞ்சைகள் மறைந்துபோகும்வரை காத்திருந்து, நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளக் காத்திருக்கவேண்டாம். “வாஞ்சைகள் மறைந்து, மனுஷன் தன் நித்தியவீட்டிற்குப் போகிறதினாலே...” (பிரசங்கி 12:5). ஒருவேளை உங்கள் இருதயம் இன்னும் தீமையினால் நிறைந்திருக்கலாம். இப்பொழுதே, துரிதமாக விலகி ஓடுங்கள். தேவனுடைய புதுப்பிக்கும் கிருபையை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும்போதே, நீங்கள் உங்களை தேவனுக்கென்று ஒப்படைக்கவேண்டும். துடிதுடிப்புடன் இருக்கும் வாலிபர்களுக்கும்கூட தேவனுடைய வல்லமைப் போதுமானதாகும். யோசேப்பு சோதிக்கப்படும்போது என்ன செய்தார் என்பதை நினைவில்கொள்ளுங்கள், அவன் போர்த்திபாரின் மனைவியிடமிருந்து தப்பி ஓடினான் (ஆதியாகமம் 39:12).
ஜான் டிரைடென் இவ்வாறு கூறினார், “கண்ணியில் அகப்பட்டு அவதிப்படுவதைகாட்டிலும், தூண்டிலைத் தவிர்ப்பது சிறந்ததாகும்.”
#5 கூட்டத்தைப் பின்பற்றாதிருங்கள்
“எல்லோரும் இதைச் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்யலாம்” என்கிற எண்ணமே கிறிஸ்தவர்கள் சுலபமாகச் சோதனையில் விழுவதற்கானப் பொதுவான ஒரு காரணமாகும். இது பிசாசுக்கும் பிடித்தமானக் கூற்றாகும். இதனால்தான் பேதுருவும் இயேசுவை மறுதலித்தான். இதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்தான், “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாய் இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” (மத்தேயு 26:35) என்று வாக்குக் கொடுத்தான். நண்பர்கள் சூழ நிற்கும்போது கொடுத்த அந்த வாக்குறுதியில் பேதுரு மிகவும் உண்மையுடன் இருந்தான். ஆனால் இயேசு நியாயசங்கத்திற்கு முன் கொண்டுபோகப்பட்டபோது, இயேசுவுடன் கூட இருப்பது பிரபலமான ஒரு விஷயமாக இருக்கவில்லை. நெருப்பைச் சுற்றிலும் இயேசுவை பரியாசம் செய்யக் கூடியிருந்தவர்களுடன் அவன் அதிக நேரம் தங்கியிருந்தபோது, கிறிஸ்துவின் எதிரிகளைப் போலவே பேசவும் நடந்துகொள்ளவும் அவனுக்கு சுலபமாக இருந்தது.
நம்முடைய நன்மைகளை மதிப்பிட உலகத்திற்கு அனுமதி அளித்தால் நாமும் அவர்களைப் போலவே மாறிவிடுவோம். பொதுவாகவே, உலகம் தவறானதுதான் என்றே வேதம் சொல்கிறது. “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிப்பவர்கள் அநேகர்” (மத்தேயு 7:13). கிறிஸ்தவர்கள் இதை சிந்திக்கவேண்டும். சக மனிதர்களிடமிருந்து வரக்கூடிய அழுத்தத்தை அவர்கள் எதிர்கொள்ளவேண்டும் – அவர்கள் வித்தியாசமானவர்களாக இருக்கவேண்டும். நூறுகோடி மக்கள் ஒரு பொய்யை நம்புகிறார்கள் என்றால், அப்போதும் அது பொய் தான்.
கடைசிக் காலங்களில், இரண்டு ஆன்மீகக் கூட்டம் மட்டுமே இருக்கப்போகின்றன – மிருகத்தின் முத்திரையுடன் ஒரு கூட்டம் மற்றும் தேவனுடைய முத்திரையுடன் ஒரு கூட்டம். இதில் முதலில் சொல்லப்பட்டக் கூட்டமே அதிகளவில் காணப்படும். ஒரு பெருங்கூட்ட மக்கள் ஆன்மீகத்தில் பற்றுடன் இருப்பதால் அது தேவனுடைய கூட்டம் என்றாகிவிடாது. பொதுவாக, மற்றவர்களெல்லோரும் குனிந்து பாகாலை வணங்கிக்கொண்டிருக்கும்போது, வேதத்தின் மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே நின்றுகொண்டிருப்பார்கள்.
கூட்டத்தைப் பின்பற்றக்கூடாது என்பதற்கான மற்றுமொரு காரணம் அவர்கள் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ளவும். நீங்கள் அந்தக் கூட்டத்தைப் பின்பற்றாதிருக்கையில், அவர்கள் உங்களை நோக்கிப் பார்க்கும்படியான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும். அழுத்தத்திற்கு மத்தியிலும் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்ட கிறிஸ்தவர்களைப் பார்த்து அநேக மக்கள் ஈர்க்கப்பட்டனர், அநேகர் மனமாற்றமடைந்தனர். ஒரே ஒரு பலவீனமானக் காரியத்தை விட்டுக்கொடுக்கும்போது அது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கட்டியிருந்த மொத்த சாட்சியையும் உடைத்துவிடும்.
#6 சுறுசுறுப்பாக இருக்கத் திட்டமிடுங்கள்
சின்சினாட்டி நகரத்திலுள்ள ஒரு மெழுகுவர்த்தி கடையில் பணம் செலுத்துமிடத்தில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு பெரிய வாசகம் இவ்வாறு கூறியது: “இந்த வாசகம் இங்கே இருப்பதும் அதற்கு முன்பாக நீங்கள் நின்றுகொண்டிருப்பதும் ஒரு மிகப்பெரிய நன்மையாகும். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்காக இங்கே வைக்கப்பட்டுள்ளது. எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதும், உங்களுக்கு உதவி செய்யக்கூடிய நபரைத் தேடுவதும் எத்தனை எரிச்சலூட்டும் விஷயம் என்பதை நாங்கள் அறிவோம். எனவேதான் நீங்கள் வாசிக்கவேண்டுமென்பதற்காக இந்த வாசகத்தை இங்கே வைத்துளோம். இதை நீங்கள் படித்து முடிக்கும்பொது எங்களுடைய விற்பனையாளர் ஒருவர் உங்களை அணுகியிருப்பார்.” மீண்டும் சிறிது இடைவெளி விட்டு ஒரு வாக்கியம் இருந்தது. பின்குறிப்பு: ஒருவேளை எங்கள் விற்பனையாளர் வரவில்லையென்றால், மீண்டும் இவ்வாசகத்தைப் படிக்கவும்.”
எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஏனெனில், தேவன் நம்மை உற்சாகமாக வேலை செய்வதற்காகவே படைத்திருக்கிறார். “செயலற்ற நிலை பிசாசுக்கான வேலை ஸ்தலமாக இருக்கிறது” என்ற வாக்கியத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது வேத வசனம் அல்ல, ஆனால் எசேக்கியேல் 16:49, 50 இக்கருத்தை வலியுறுத்துகிறது. “இதோ, கர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன... அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.”
தொடர் பாவம் மற்றும் ஒழுக்கச் சீர்கேடு மட்டுமே சோதோம் கொமோராவின் பாவமல்ல. சோதோமின் பள்ளத்தாக்கு செழிப்பானத் தாவரங்களையும் ஆகாரத்திரட்சியையும் உடையதாயிருந்தது. அங்கே குடியிருந்தவர்களுக்குக் குறைவற்ற ஓர் வாழ்க்கை இருந்தது. ஓய்வு அதிகமுள்ள வாழ்க்கையை அது கொடுத்ததால் லோத்து அங்கே குடிபெயர்ந்தான். செய்வதற்கு எதுவுமில்லாமல் ஒரு நபர் இருந்தால், மாம்சமான இருதயத்தை தீமை செய்ய திட்டமிடுவதற்கு சாத்தான் உதவுவான். “எல்லா தீமைக்கும் மூலகாரணம் செயலேதுமற்ற நிலைபாடாகும்.”
ஒரு சமயத்திற்கு ஒரு காரியத்தை மட்டுமே செய்யும்படிக்கு வடிவமைக்கப்பட்ட மனிதனுடைய மனதிற்குள்தான் பாவம் துவங்குகிறது. நாம் நம்மை வேலையில் ஈடுபடுத்திக்கொண்டால், விசேஷமாக சாட்சிபகர்தல் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் கவனம் செலுத்தினால், நாம் தீமையைக் குறித்து யோசிக்க நேரமிருக்காது. “தீவிரமான சேவையில் ஈடுபடுவதன் மூலமாகவே தீமையை எதிர்ப்பதற்கான பெலன் சிறப்பான முறையில் கிடைக்கிறது” என்று E. G. உவைட் கூறுகிறார். இயேசுவுக்குத் தீவிரமாக சேவை செய்வதில் ஈடுபடுதல் என்பது பிரச்சனைகளிலிருந்து விலகியிருப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். விழுகைக்குப் பிறகு, “உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” என்று ஆதாமிடம் தேவன் கூறியபோது, அது அவன் வேலையில் மூழ்கியிருந்து பிரச்சனைகளிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு ஆசீர்வாதமாகவே இருந்தது (ஆதியாகமம் 3:19) ஆனால் எதையும் செய்யாமல் இருக்கும் ஒரு நபர் தன்னை சோதிக்கும்படியாகப் பிசாசை சோதிக்கிறான்.
“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15,16). இக்கருத்தை ஒரு இத்தாலியப் பழமொழியும் வலியுறுத்துகிறது, “வேலை செய்கிறவன் ஒரு பிசாசினால் சோதிக்கப்படுகிறான், சும்மா இருக்கிறவன் ஆயிரம் பிசாசுகளினால் சோதிக்கப்படுகிறான்.”
#7 ஒரு திட்டத்தை வைத்திருங்கள்
நாம் அவ்வப்போது பாவத்தில் விழுந்துவிடுகிறோம், ஏனெனில் சோதனை வருவதை நாம் பார்க்கும்போது, அது வந்தவுடன் என்ன நடக்கும் என்பதை அறிவதற்கு வெளிச்சத்தைக் கண்டு மிரண்டுபோய் அசையாமல் நிற்கும் மானைப்போல ஆவலாகக் காத்திருக்கிறோம். ஆனால் சோதனை வருவதற்கு முன்னமே ஆயத்தமாக இருப்பது சிறந்ததாகும். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று நீதிமொழிகள் 22:3 அறிவுரை கூறுகிறது. ஞானமுள்ள மனிதன் சாத்தியமானப் பிரச்சனைகளை எதிர்கொள்ள அதின் பாதையை ஆராய்கிறான். அங்கே திருடர்கள் கூட்டத்தை அவன் பார்க்கும்போது, “நான் மறைந்துகொள்கிறேன் அல்லது என் வழியை மாற்றிக்கொள்கிறேன், ஏனெனில் நான் கொள்ளையடிக்கப்பட விரும்பவில்லை!” என்று கூறுவான். ஆனால் பேதையோ, “ஆஹா, அங்கே திருடர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் இங்கே வரும்போது என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளேன்” என்று கூறுவான்.
கிறிஸ்தவர்கள் அவ்வப்போது சோதனையுடன் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. “இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தால், இந்தப் புத்தகத்தை நான் படித்தால், இந்தப் பானத்தை நான் குடித்தால் நான் சோதிக்கப்படுவேனா?” என்று கூறுகிறோம். பென் பிராங்ளின் இவ்வாறு கூறுகிறார்: “சிறிதளவு தற்காப்பு, பெரிய அளவிலான குணமாக்கும் முயற்சியைக் காட்டிலும் மதிப்புவாய்ந்ததாகும்.” மேலும் “உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:29) என்று இயேசு கூறுகிறார். உங்களை கீழே தள்ளி வீழ்த்தக்கூடிய ஒரு சோதனை உண்டென்று நீங்கள் அறிந்தால், முன்னெச்சரிக்கையுடன் அதற்காக என்னென்ன தடுப்பு வழிகளை எடுக்க முடியுமோ, எவ்வளவு நம்பிக்கையற்ற காரியமாக அது இருந்தாலும் சரி, நீங்கள் மேற்கொள்ளப்படாதபடிக்கு அவைகளைச் செய்யுங்கள்.
நீங்கள் புகைப் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்றால், புகைப் பிடிக்கும் நண்பர்களை, அப்படிப்பட்ட இடங்களை, அல்லது உங்களைப் புகைப் பிடிக்க அதிகமாகத் தூண்டும் இடங்களைத் தவிர்த்துவிடுங்கள். இன்னும் சொல்லப்போனால், தப்பித்துக்கொள்வதற்கு ஒரு திட்டத்தைப் போடுங்கள். அதிகமாகச் சாப்பிடுவது உங்களுடைய சோதனை என்றால், தேவையான அளவு உணவை எடுத்துக்கொண்டு, அது முடிந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்த ஒரு மேம்படுத்தப்பட்ட தீர்மானத்தை எடுங்கள். சோதனையைக் குறித்து முன்னமே யோசிக்காததால், பலகோடி மக்கள் பாவத்திற்குள் சிறுகச் சிறுக விழுந்துகொண்டிருக்கிறார்கள். இக்கருத்து என்னுடைய அடுத்த கருத்திற்கு அழகாக வழிநடத்துகிறது.
#8 உங்களை அறியுங்கள்
ஒரு புதிய பேஸ்பால் பேட்டை வாங்குவதற்காக அலெக்ஸ் தன்னால் முடிந்தவரை எல்லா காசுகளையும் சேர்த்துவைத்தான், ஆனால் அவனுக்கு அது போராட்டமாகவே இருந்தது. ஒருநாள் இரவு ஜெபம் செய்யும்போது, “தேவனே, பேஸ்பால் பேட்டை வாங்குவதற்கு என்னுடைய பணத்தை சேமித்து வைக்க எனக்கு உதவி செய்யுங்கள். மேலும் அந்த ஐஸ் க்ரீம் விற்பவரை இந்தத் தெருவிற்கு வரவிடாதீர்கள்!” என்று கருத்துடன் விண்ணப்பம்பண்ணினான்.
ஸ்பானிய பழமொழி ஒன்று இவ்வாறு அறிவுறுத்துகிறது, “உங்கள் தலை வெண்ணையினால் ஆனதென்றால் நீங்கள் ஒரு அடுமனையாளராக இருக்காதீர்கள்.”
போதைப்பழக்க மறுவாழ்வு மையத்தில் ஒருவர் சேர்ந்தால், அவர் முதலாவது தான் குடிப்பழக்கத்தில் இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட நபர் உண்மையாகவே ஒரு மறுசீரமைப்பிற்குச் செல்ல முடியும், ஏனெனில் அவர் தன்னுடைய பெலவீனம் இன்னதென்பதை அறிந்துகொண்டார். அதேப்போல, ஒரு கிறிஸ்தவனாக மாறுவதில் முதல் படி என்னவென்றால், “நான் ஒரு பாவி” என்பதை ஒப்புக்கொள்வதாகும்.
“நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது” (1 யோவான் 1:10). “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 10:12). நாம் நம்முடைய பெலத்தின்மேல் நம்பிக்கைவைக்கக் கூடாதென்று வேதம் சொல்லுகிறது. ஒரு சோதனையின்மீது எனக்கு சுயக்கட்டுப்பாடு உள்ளது என்று நினைக்கத் துவங்கி, “அது என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு பெலன் உண்டு. நான் வெற்றி பெற்றிருக்கிறேன்!” என்று சொல்லத் துவங்கும்போதே நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதுதான் நாம் விழுவதற்கான சரியான இடமாகும். சில கிறிஸ்தவர்கள் அவர்கள் ஏற்கனவே மேற்கொண்ட காரியங்களைக் குறித்து பெருமைகொள்கிறார்கள், ஆனால் சாத்தான் அவர்களை வீழ்த்துவதற்கு அவர்களாகவே வழிவகுக்கிறார்கள். இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியில், அவர் பேதுருவை எச்சரித்தார்: “இன்று இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மாற்கு 14:30). ஆனால் பேதுருவோ, “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்” (மாற்கு 14:31). பேதுரு எவ்வளவு பெலவீனமாக இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை என்பதற்காக இயேசு அவனை எச்சரித்தார்.
மேலும் நீங்கள் மற்றொருவருடைய பலவீனத்தை மேற்கொள்ள உதவிசெய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து ஜெபிக்கவேண்டும். ஆனால், அவர்கள் செய்த அதே தவறை நீங்களும் செய்யக்கூடிய அபாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும். விரைந்தோடும் தண்ணீரிலிருந்து மற்றொருவரைக் காப்பாற்றும் ஒருவர் தானும் அதே தண்ணீருக்குள் விழுந்துவிடாதபடிக்குக் கவனமாக இருக்கவேண்டும். எனவே நம்முடைய பலவீனம் இன்னதென்பதை அறிந்துகொள்வதில் நாம் எப்போதுமே விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு” (கலாத்தியர் 6:1).
சோதனையைக் குறித்து விழிப்புடன் இருங்கள் – எத்தனை அதிகமாக அதை அடையாளம் காண்கிறீர்களோ அத்தனைத் தெளிவாக அது தென்படும்.
#9 தேவனுடன் இணைந்து தீமையை மேற்கொள்ளுங்கள்
கைவிடப்பட்டத் தவறானப் பழக்கங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப நாம் தவறும்போது, நாம் சமரசம் செய்வதற்கு நம்மை நாமே விட்டுவிடுகிறோம். தான் அடிமையான ஒரு தவறானப் பழக்கத்தை மேற்கொண்டு, அதற்கு பதிலாக மற்றொரு தவறானப் பழக்கத்திற்கு அடிமையான மக்களை நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்கள் வேறொரு நேர்மறையான காரியத்தைக் கண்டறியவில்லை.
“அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என்வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாயிருக்கும் என்றார்” (லூக்கா 11:24–26).
உணவு பழக்கத்தில் சீர்குலைவு அல்லது உணவிற்கு அடிமையாகுதல் போன்றவற்றோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், உண்ணுவதை எளிமையாக உங்களால் விட்டுவிடமுடியாது. இரகசியம் என்னவென்றால் “எது நன்மையானதோ அதை உண்ணவேண்டும்” (ஏசாயா 55:2). “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12:21). நாள்முழுவதும் சாக்லேட்டைக் கொறிப்பது உங்கள் பிரச்சனையாக இருந்தால், உலர்ந்த திராட்ச்சை அல்லது பாதாம் பருப்பை உங்களுடன் வைத்துக்கொள்ளவும். நீங்கள் சிகரெட்டுகளையும் தூக்கி எரிந்து விட்டீர்களா? பல்குத்தும் குச்சிகளையோ அல்லது சூரியகாந்திப் பூவின் விதைகளையோ வாங்கி வைத்துக்கொள்ளவும். (சாக்லேட்டை வைத்துக்கொள்ள வேண்டாம்).
யாரேனும் உங்களை அவமதித்துவிட்டாலோ அல்லது உங்களைக் கொடுமைப் படுத்தியிருந்தாலோ, அதற்கு பதில் தீமை செய்யாமல் இரக்கத்தைக் காட்டுங்கள். “அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” (ரோமர் 12:20). தீமையை நன்மையினால் மேற்கொள்ளவும். பருந்துகள் அரசப்பறவைகளினால் தாக்கப்படும்போது, அவை திருப்பித் தாக்காது, மாறாக அவைகளைத் துன்புருத்தும் பறவைகள் அவற்றை விட்டுவிடும் தூரத்திற்கு விசாலமான வட்டப்பாதையில் மேல்நோக்கிப் பறந்துகொண்டேயிருக்கும்.
#10 உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள்
நம்முடைய வலிமையான நேரங்களில் அல்ல மாறாக பெலவீனமான நேரங்களில் தான் சோதனைகள் வரும். நாம் நம்முடைய பெலன், பொறுமை, அன்பு, ஆரோக்கியம் போன்றவற்றின் வரையறைக்குள் இருக்கும்போதுதான் கிறிஸ்தவனாக இருக்காதவாறு சோதிக்கப்படுகிறோம். ஜாக்கிரதையாயிருக்கவும்; இயேசுவுக்கான சோதனை நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பிறகுதான் துவங்கியது. அவர் சோர்வாகவும் பசியுடனும் காணப்பட்டார். பேதுரு இயேசுவை மறுதலிக்கும்போதும் அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.
அன்றாட உடற்பயிற்சி அல்லது ஹார்மோன்கள் குறைபாடுவரை அனைத்துமே அடிப்படை சோதனைகளை எதிர்கொள்ளும் நமது திறனை செல்வாக்கிற்குட்படுத்துகின்றன. பெரும்பாலும் நாம் நோயுற்றிருக்கும்போது அல்லது நமது ஆற்றல்கள் பெலவீனமாக இருக்கும்போதுதான் நாம் எதிர்மறையாகச் செயல்படுவோம். கணவன் மனைவிக்கிடையே நடக்கக்கூடிய பெரும்பாலான சண்டைகள் அந்நாளின் முடிவில் இருவரில் யாராவது ஒருவர் சோர்வாகவும் பசியோடும் இருக்கும்போதுதான் நடைபெறும். சரியான நேரத்திற்கு நல்ல உணவுகளை உண்டு போதுமான அளவு தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எனக்குப் பிடித்தமான ஆசிரியர்களில் ஒருவரும் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார், “வக்கிரமான பசியுணர்வில் மூழ்கியிருப்பதன் மூலம் சோதனையை எதிர்கொள்வதற்கான ஆற்றலை மனிதன் இழக்கிறான்.” அதிகமான இனிப்புகள் தற்காலிகமாக உங்களை உற்சாகப்படுத்தி அதன்பின் மனச்சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகளை மட்டுமே கொடுக்கும்.
சோர்வு மற்றும் பசியை எல்லா நேரத்திலும் உங்களால் தவிர்க்கமுடியாது. ஆனால், ஒரு சுரங்கப்பாதையின் வழியாக ஒரு போர்வீரன் கடந்துச்செல்லும்போது, அவன் எங்கே தன் கால்களை வைக்கிறான் என்பதில் கவனமாயிருப்பான். உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்கள் அல்லது உந்தும் செயல்பாடுகளை எளிதில் விழக்கூடிய இப்படிப்பட்ட நேரங்களின்போது தவிர்க்கவும். “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாமிசமோ பெலவீனமானது: (மத்தேயு 26:41) என்று இயேசு கூறினார். அதற்காக நாம் முயற்சித்து, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரியங்களை செய்து அதன் விளைவாக நமது ஒழுக்க ஆற்றல்களை அதிகரிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. ஓர் நல்ல இரவு தூக்கம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் ஆரோக்கியமானக் காலை உணவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது, நீங்கள் கோலியாத்தையே எதிர்ப்பதற்கு ஆயத்தமாயிருப்பதைப் போல் உணருவீர்கள்.
#11 தப்பிக்கும் வழியைக் கண்டறியுங்கள்
விமானத்திற்குள் ஏறியவுடன் அவசர காலத்தில் வெளியேறுவதற்கான இடங்களை மனதில் பதித்துக்கொள்வேன். இது ஏதோ மனரீதியானக் கோளாறல்ல, ஆனால் விவேகமாக இருப்பதாகும். நம்மொவ்வொருவருக்கும் தப்பித்துக்கொள்வதற்கான வழியை தேவன் வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதே, சோதனையிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழியாகும். இந்த வசனத்தை நினைவுகூறவும்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிகொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13). இது உண்மையாகவே ஒரு நல்ல செய்தியாகும். நிலையற்ற நமது விசுவாசத்தின்மேல் நாம் சார்ந்திருக்கத்தேவையில்லை; நாம் தேவன் பட்சமாகச் சாரலாம், ஏனெனில் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்!
நீங்கள் சோதிக்கப்படும்போது, “சாத்தான் என்னை இந்த அளவிற்குத்தான் சோதிக்கவேண்டுமென்று தேவன் வகையறுத்திருக்கிறார், அவருடைய கிருபையினால் இதை என்னால் மேற்கொள்ளமுடியும்” என்று நீங்கள் கூறலாம். “என்னால் இனி பிசாசை எதிர்க்கவே முடியாது” என்று நீங்கள் சொல்லவேண்டியதில்லை. அவ்வாறு சொல்வதால் நீங்கள் தேவனைப் பொய்யராக்குகிறீர்கள்!
இஸ்ரவேல் புத்திரரை எகிப்தியர்கள் பின்னால் இருந்து துரத்தினார்கள், அவர்களுக்குப் பயந்து ஓடும்போது இருபக்கமும் மலைகளும் அவர்களுக்கு எதிராக செங்கடலும் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்களுக்கு அது ஒரு கைவிடப்பட்ட சூழ்நிலையைப்போல இருந்தது. ஆனால் தேவன் உண்மையுள்ளவர் என்பதை வாகுத்தத்தம்பண்ணியிருந்தார், அவர்கள் தப்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்தினார். வேதத்தில் இதேப்போன்ற பல மோசமான சூழ்நிலைகளைப் பார்க்கலாம். ஆனால், எல்லா நேரத்திலும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்தார். மேலும் உங்களைக் காப்பாற்ற அவர் வியக்கத்தக்க விதத்திலும் செயல்படுவார். இயேசுவைப் பின்பற்றினவர்களுக்கு சாப்பிட ஒன்றுமில்லாமற்போனபோது, அவர்களுக்காக தேவன் பரத்திலிருந்து உணவைக் கொடுத்தார்.
எனவே, “எந்த ஒரு வழியையும் என்னால் காணமுடியவில்லை” என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் நினைக்கும்போது, இச்சம்பவங்களை நினைவுகூர்ந்து தேவனை விசுவாசிக்கவும் நாம் தப்பிப்பதற்கு அவர் அனுப்பும் வழிக்காகக் காத்திருக்கவும் உங்களை ஆயத்தப்படுத்துங்கள். சாத்தானுடைய எப்பேற்பட்ட மோசமான சோதனையாக இருந்தாலும் சரி, “நான் தேவனை விசுவாசிக்கப்போகிறேன். நான் சரியானதைச் செய்யப் போகிறேன்” என்று சொல்லுங்கள். நீங்கள் தப்பித்துக்கொள்வதற்கு தேவன் உங்களுக்கு ஒரு போக்கை உண்டுபண்ணுவார்.
#12 விழுகையில் தப்பிப் பிழைப்பது
1944-ம் ஆண்டு, விமானக் காவல் வீரர் அல்கிமேட் என்பவர் மனித வெடிகுண்டாக ஜெர்மனிக்கு மேலிருந்து தலைகீழாக 18,000 அடி உயரத்திலிருந்து குதித்தார். ஒரு சிறு சிராய்ப்புகூட இல்லாமல் அவர் உயிர்பிழைத்தார், ஏனெனில் அவர் கீழே விழுவதைச் சரிவில் பனி மூடியிருந்த தேவதாரு மரங்கள் தடுத்துவிட்டன.
நான் கடைசி முறையாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறேன் என்ற கருத்தே சோதனையை மேற்கொள்வதற்கான ஊன்றுகோலாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். வழுவிப்போகாமல் உங்களைக் காப்பதற்கு இயேசு வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும் (யூதா 1:24). ஆனால் ஒருவேளை நீங்கள் விழுந்தால், அங்கேயே விழுந்து கிடக்கவேண்டாம்.
நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், தவறை எதிர்கொள்வதற்கான மாபெரும் வல்லமை உங்களுக்கு உண்டு. அவருடன் தங்கியிருப்பதென்பது அவருடைய ஆவியானவருடன் தங்கியிருப்பதாகும். கலாத்தியர் 5:16 இவ்வாறு கூறுகிறது: “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” நோவா, ஏனோக்கு மற்றும் ஆபிரகாம் தேவனுடன் நடந்தார்கள். உங்கள் முழங்கால்களில் நின்று பெலனுக்காக வேண்டுவதன்மூலம் நீங்களும் அதே விதமாக நடக்கமுடியும். தன்னை நம்பித் தன்னிடம் உதவிவேண்டும் பிள்ளையைப் பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காகப், பரலோகத்திலுள்ள ஒவ்வொரு தூதனையும் தேவன் அனுப்புவார். ஆகவே, நாம் பிசாசின் பொய்களுக்குப் பதிலாக இயேசுவை பின்பற்றத் தீர்மானிக்கவேண்டும். தேவன் நம்மை ஒழுக்கப் பண்புகளையுடைய ஜீவிகளாகப் படைத்திருக்கிறார், மேலும் சாத்தானால் நம்மை பாவம் செய்ய வைக்கமுடியாது.
தேவனுடைய கிருபையினால், அவருடைய ஆவியின்மூலம் நீங்களும் நானும் ஒவ்வொரு சோதனையையும் எதிர்க்கமுடியும். ஒருவேளை நீங்கள் விழுந்துவிட்டால், முயற்சியைக் கைவிடவேண்டாம். இடறிவிழும் அநேக மக்கள் அப்படியே கிடக்கிறார்கள். அவர்கள், “பரவாயில்லை, இப்பொழுதும் நான் தோற்றுவிட்டேன்; அதனால் மற்ற எல்லா சோதனைக்கும் நான் அடிபணிகிறேன்” என்று கூறுகின்றனர். நீங்கள் இழந்துபோன இடத்தை மீண்டும் கைப்பற்ற தேவனால் உதவி செய்யமுடியும், மேலும் எதிர்காலத்தில் வரப்போகும் சோதனைகளினின்றும் உங்களை அவர் காப்பாற்றுவார். இயேசுவைத் தொலைத்த பிறகு யோசேப்பும் மரியாளும் மூன்று நாட்கள் துக்கத்துடன் அவரைத் தேடியதுபோல நீங்களும் தேடவேண்டியிருக்கும். ஆனால், அவர் அவருடைய பிதாவின் வீட்டில் உங்களுக்காகக் காத்திருப்பார்.
“எனக்கு உன்னைத் தெரியும்! நான் உன்னை சோதித்தேன், நீ விழுந்துவிட்டாய்! நீ நல்லவனில்லை. நீ உன்னை கிறிஸ்தவனென்று சொல்லிக்கொள்கிறாய், ஆனால் நீ ஒரு மாய்மாலக்காரன். இன்னும் சொல்லப்போனால், நீ இன்னும் இரட்சிக்கப்படவில்லை!” என்று பிசாசு தன்னுடைய துன்மார்க்கமான வார்த்தைகளை உங்கள் காதுகளில் இரகசியமாகக் கூறி உங்களை மனமடிவாக்குவான். ஆனால் “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” என்று வேதம் வாக்குரைக்கிறது (1 யோவான் 2:1). அனைவரும் செய்கிற பிரகாரம், நீங்களும் பாவம் செய்யலாம் ஆனால் சோர்ந்துபோகவேண்டாம். சாத்தான் உங்களை வஞ்சித்து ஒருவேளை நீங்கள் விழுந்தால், மீண்டும் எழுந்து நில்லுங்கள், விழுந்துகிடக்க வேண்டாம். உங்களுடைய கடந்தகாலத் தோல்விகள் எதிர்காலத்தில் நீங்கள் சோதனையில் விழுவதற்கான சாக்குபோக்காக இருக்கவேண்டாம். எல்லாவற்றையும் மேற்கொள்ள தேவனால் உங்களுக்கு உதவமுடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள்.
சுருக்கவுரை – பன்னிரண்டு படிகள்
இந்தப் படிகள் அனைத்தையும் சுருக்கமாகக் கூறுவது மிகவும் சுலபமாகும். நீங்கள் தேவனிடம் அன்புகூருவதால் மட்டுமே உங்களால் எந்த சோதனையையும் ஜெயிக்கமுடியும் என்பதே மிகவும் விசேஷித்த வழியாக இருக்கவேண்டும். பாவம் தேவனை காயப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும், அதனால் நீங்கள் சோதிக்கப்படும்போது, “என்னால் இதை செய்யமுடியாது ஏனென்றால் அது தேவனை காயப்படுத்தும்” என்று சத்தமாக நீங்கள் சொல்லவேண்டும்.
“தேவனுக்கான நமது அன்புதான் சோதனையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை அளக்கும் அளவுமாணி” என்று எர்வின் W. லுட்சர் கூறுகிறார். நீங்கள் அதிகமாக தேவனை நேசிக்கும்போது, உங்களை செல்வாக்கிற்குட்படுத்தும் சாத்தானுடைய ஈர்ப்புகள் குறைவாக இருக்கும். நீங்கள் சோதிக்கப்படும்போது, இயேசு உங்களை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை நினைவுகூறுங்கள், பின்னர் அந்த அன்பிற்கு ஈடாக உங்களுக்கு முன் இருக்கும் தீமையை எதிர்கொள்ளுங்கள்.
நாம் அனைவரும் சோதிக்கப்படுகிறோம், ஆனால் வேதத்தில் எழுதியிருக்கிறபடி, “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்” மூலம் நாம் ஜெயங்கொள்ளுகிறவர்களாக மாறமுடியும் என்று தேவன் வாக்குரைத்திருக்கிறார். நாம் எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்று இயேசு நமக்குக் கற்றுத்தருவார். பிசாசினால் இயேசுவைப் பாவம் செய்ய வைக்க முடியவில்லை என்றால், நம்மையும் அவனால் பாவம் செய்ய வைக்க முடியாது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1 கொரிந்தியர் 15:57). ஜெயங்கொள்ளும் வல்லமையை அவரிடம் கேளுங்கள், மகிழ்ச்சியுடன் அவருடைய வேதத்திற்குள் மூழ்குங்கள்.

